லைக் போட்டால் சம்பளம்: எப்படி நடக்கிறது இந்த மோசடி?

மக்களிடமிருந்து பல லட்சக்கணக்கில் மோசடி செய்யும் கும்பல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
லைக் போட்டால் சம்பளம்: எப்படி நடக்கிறது இந்த மோசடி?


வீட்டிலிருந்தே வேலை, மாதம் 30 ஆயிரம் சம்பாதிக்கலாம், விடியோ அல்லது ரீல்ஸ்களுக்கு லைக் போட்டால் பணம் என்று பல விதங்களில் விளம்பரங்கள் செய்து, மக்களிடமிருந்து பல லட்சக்கணக்கில் மோசடி செய்யும் கும்பல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மோசடி கும்பல்களுக்கு இணையாக, இந்த மோசடி கும்பல்களிடம் ஏமாறும் கும்பல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

சொன்னபடி பணம் கொடுத்துவிடுகிறார்கள், உடனே பணம் வந்துவிடுகிறதே என்றுதான் இதில் ஈடுபடும் அந்த ஏமாளிகள் ஆரம்ப நாள்களில் அவர்களுக்கு ஆலோசனை சொல்லும் நபர்களிடம் கூறும் வார்த்தைகள்.

ஆரம்பத்தில் அல்லது ஒரு சில மாதங்களுக்கு அவர்கள் சொல்வது போலத்தான் சுமூகமாக செல்லும். பின்னர்தான் லட்சக்கணக்கில் ஏமாறும்போதுதான் ஏமாளிகளுக்கு விழிப்பே வருகிறது.

ஆனால், இது போன்ற மோசடி கும்பல் குறித்து மாநில காவல்துறைகள் மக்களுக்கு பல விதங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் நாள்தோறும் இந்தக் கும்பலிடம் ஏமாறும் கும்பல் ஏமாந்துகொண்டுதான் இருக்கிறது.

அதாவது வாட்ஸ்ஆப்பில், உங்களுக்கு வீட்டிலிருந்தே வேலை வேண்டுமா? நாள் ஒன்றுக்கு 1000 முதல் 2000 சம்பாதிக்கலாம் என்ற விளம்பரம் வருகிறது.

இதைப் பார்த்து உடனே பதிலளித்தால், இன்ஸ்டாகிராம் அல்லது யூடியூப் விடியோவைப் பார்த்துவிட்டு லைக் போட்டால் பணம் என்று சொல்லுவார்கள். ஒருலைக் போட்டால் 70 ரூபாய் கொடுக்கிறார்கள். இப்படி பல யூடியூப் மற்றும் இன்ஸ்டா ஐடிகளை அனுப்பி லைக் போட வைத்து உடனடியாக பணமும் அனுப்புகிறார்கள்.

பிறகு, பிட்காயின் வணிகத்தில் ஈடுபடுத்துவதாக அறிமுகம் செய்து, அதில் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யச் சொல்கிறார்கள். முதலில் 1000 செலுத்தினால் 1500 ரூபாய், 9000 செலுத்தினால் 10000 என்பது போல லாபம் கிடைக்கும் வகையில், அவர்களுக்கு பணத்தை திரும்ப செலுத்துகிறார்கள். இப்படியே 30000 செலுத்தினால் 8 ஆயிரம் லாபம் என்பது போல கொண்டு வருகிறார்கள்.

பிறகு இந்த வாட்ஸ் அல்லது டெலிகிராம் குழு, விஐபி குழுவாக உயர்த்தப்பட்டு, அடுத்த கட்டத்துக்குச் சென்றுவிட்டதாகக் கூறுகிறார்கள். அதற்குக் காரணம் அடுத்த கட்டமாக அதிகத் தொகையை முதலீடு செய்ய வேண்டும். அதிக லாபம் கிடைக்கும் என்று கூறுவார்கள். இப்படியே சிறுக சிறுக நம்பிக்கையை ஏற்படுத்திய பெரிய பெரிய தொகையை முதலீடு செய்ய வைத்து கிட்டத்தட்ட பல லட்ச ரூபாயை சாமானியனிடமிருந்து கூட மோசடி செய்துவிடுகிறது இந்தக் கும்பல். ஒன்று ஆசைவார்த்தை மற்றொன்று கைமேல் பணம் என்ற தாரக மந்திரமே.

பணம் பறிபோன பிறகுதான் எப்படி ஏமாற்றப்பட்டோம் என்று பலருக்கும் தெரிகிறது. ஆனால், அதன்பிறகு அவர்களுக்குத் தெரிந்தும் எந்தப் பயணம் இருப்பதில்லை. இப்படி ஏமாந்துவிட்டால் உடனடியாக சைபர் கிரைம் காவல்துறையினருக்குத்தகவல் கொடுத்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com