ராணுவ வீரர் கடத்தல்: பயங்கரவாதிகளுக்கு தாய் விடுக்கும் கோரிக்கை

லடாக்கில், கடத்தப்பட்ட ராணுவ வீரரின் தாய் பயங்கரவாதிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராணுவ வீரர் கடத்தல்: பயங்கரவாதிகளுக்கு தாய் விடுக்கும் கோரிக்கை


ஸ்ரீநகர்: தன் மகன் ஒன்றும் அறியாதவர்,  இளைஞர். அவரை விட்டுவிடுங்கள் என்று கடத்தப்பட்ட ராணுவ வீரரின் தாய் பயங்கரவாதிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

லடாக்கில், பணியிலிருந்து வீடு திரும்பிய ராணுவ வீரர் ஜாவேத் அகமது வானி, வீட்டுக்கு வரும் வழியில் காணாமல் போயிருக்கிறார். அவரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ராணுவத்தில் பணியாற்றும் ஜாவேத் அகமது, லடாக்கிலிருந்து, தனது வீட்டுக்கு பத்து நிமிடத்தில் வந்துவிடுவேன் என்றும் தனக்குப் பிடித்த உணவை சமைத்து வைக்குமாறு தாய்க்கு நேற்று இரவு 8 மணிக்கு போன் செய்திருக்கிறார். 

இந்த நிலையில, தனது ஆல்டோ காரில் காய்கறிகளை வாங்க சாவல்காம் கிராமத்துக்குச் சென்ற அவர், வீடு திரும்பாத நிலையில், அவரது அக்கம் பக்கத்து வீட்டினர், அவரது கார் பாரன்ஹல் கிராமத்தில் தனியாக நிற்பதாகக் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

அங்கே சென்று பார்த்தபோது, கார் திறந்து நிலையில் இருந்துள்ளது. அதற்குள் காய்கறி, பழங்கள் அனைத்தும் இருந்துள்ளன. காரில் ரத்தக் கறையும் இருந்ததைப் பார்த்து தனது மகன் கடத்தப்பட்டிருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

இந்த நிலையில், பயங்கரவாதிகளுக்கு, கடத்தப்பட்ட ராணுவ வீரரின் தாய், தனது மகனை விட்டுவிடும்படியும், அவருக்கு ஒன்றும் தெரியாது, இளைஞர், அவர் ஏதேனும் தவறு செய்திருந்தால், தான் மன்னிப்புக் கோருவதாகவும் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்து விடியோ வெளியிட்டிருக்கிறார். அந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தெற்கு மற்றும் மத்திய காஷ்மீர் பகுதியில், விடுமுறையில் இருக்கும் ராணுவ வீரர்கள் மற்றும் காவலர்கள் கடத்தப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.

மார்ச் 2022ல் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் ராணுவ வீரர் சமீர் அகமது மல்லாவைக் கடத்திச் சென்றனர்.  பிறகு அவரது உடல் பட்காம் அருகே கண்டெடுக்கப்பட்டது.

2021ஆம் ஆண்டு கடத்தப்பட்ட ஷகிர் மன்சூரின் உடல், அவர் கடத்தப்பட்டு ஓராண்டுகளுக்குப் பிறகு அழுகிய நிலையில் கண்டெடூக்கப்பட்டது.

2017ஆம் ஆண்டு மே மாதம், வீட்டில் நடக்கும் திருமணத்துக்காக வந்த ராணுவ வீரர் உம்மர் ஃபயாஜ், கடத்தப்பட்டு, சுட்டுக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com