வெஜிடேரியன் ஒன்லி.. ஐஐடி-மும்பையில் எழுந்த சர்ச்சை

சைவம் சாப்பிடும் மாணவர்களால், அசைவ உணவு சாப்பிடுவோர் வெளியேற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வெஜிடேரியன் ஒன்லி.. ஐஐடி-மும்பையில் எழுந்த சர்ச்சை


ஐஐடி-மும்பையில் அமைந்துள்ள உணவகத்தில், சைவம் சாப்பிடும் மாணவர்களால், அசைவ உணவு சாப்பிடுவோர் வெளியேற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது மட்டுமல்லாமல், ஐஐடி-மும்பை உணவகத்தில் அசைவ உணவு சாப்பிட்ட மாணவரை, மற்றொரு மாணவர் அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஐஐடி-மும்பையில் அமைந்துள்ள 12வது எண் கொண்ட உணவகத்தில் கடந்த வாரம் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு உணவருந்தும் சில சைவ உணவு சாப்பிடும் மாணவர்கள், இதுபோன்ற பதாகைகளை உணவகம் முழுவதும் ஒட்டியதாகவும், அசைவ உணவு சாப்பிட்ட மாணவர்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்று மாதங்களுக்கு முன்பு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஒரு மாணவர் எழுப்பிய கேள்விக்கு, இந்த கல்வி மையத்தில், உணவுப் பிரிப்புக் கொள்கை எதுவும் இல்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது என்றும், ஆனாலும் கூட, அசைவம் மற்றும் சைவம் சாப்பிடும் மாணவர்களுக்கு என தனித்தனி இருக்கை வரிசைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அம்பேத்கர் பெரியார் மாணவர் வட்டம் (ஏபிபிஎஸ்சி) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயலைக் கண்டித்துக்கும் மாணவர் அமைப்பு, இந்த பதாகைகளை கிழித்தெறிந்ததுடன், சமூக வலைத்தளத்தில் இதற்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொண்டுள்ளது. இது பின்தங்கிய இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிராக நடக்கும் அநீதி என்றும் தெரிவித்து வருகிறது.

இது குறித்து பதிலளித்திருக்கும் உணவகத்தின் பொதுச் செயலாளர், மாணவர்கள் அனைவருக்கும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். அதில், இந்த உணவகத்தில் ஜைன மதப்படியான உணவு வழங்க மட்டுமே தனி கவுண்டர் உள்ளது. மற்றபடி எந்த உணவுக்கும் தனி இருக்கை வசதிகள் இல்லை. மாணவர்கள் அனைவரும் மற்ற மாணவர்களின் உணவு விருப்பத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திகளுக்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான விமரிசனங்கள் எழுந்துள்ளன. வெஜிடேரியனுக்கே சரியான ஸ்பெல்லிங் தெரியாதவர்கள் என்று பதாகையை அடித்தவர்களை பலரும் விமரிசித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com