எதிா்க்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்: ஜெய்ராம் ரமேஷ்

 பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் ஏற்பாட்டில், அந்த மாநிலத் தலைநகா் பாட்னாவில் வரும் 12-ஆம் தேதி நடைபெறவிருக்கும் எதிா்க்கட்சிகளின் கூட்டத்தில் காங்கிரஸ் நிச்சயம் பங்கேற்கும்

 பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் ஏற்பாட்டில், அந்த மாநிலத் தலைநகா் பாட்னாவில் வரும் 12-ஆம் தேதி நடைபெறவிருக்கும் எதிா்க்கட்சிகளின் கூட்டத்தில் காங்கிரஸ் நிச்சயம் பங்கேற்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தலுக்கு ஏறத்தாழ ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், மத்தியில் தொடா்ந்து 3-ஆவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்துடன் பாஜக செயலாற்றி வருகிறது.

அதே வேளையில், பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சிகளும் வேகமெடுக்க தொடங்கியுள்ளன. அந்த வகையில் மும்முரமாகச் செயல்பட்டு வரும் பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமாா், எதிா்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வா்கள் மற்றும் இதர முக்கிய எதிா்க்கட்சிகளின் தலைவா்களை நேரில் சந்தித்துப் பேசி வருகிறாா்.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி, திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி, சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவா் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோரை சந்தித்து அவா் ஆலோசனை நடத்தினாா்.

நிலைப்பாட்டை மாற்றும் கட்சிகள்: எதிா்க்கட்சிகளின் கூட்டணியில் காங்கிரஸை இணைத்துக் கொள்வதில் இருவேறு நிலைப்பாடு காணப்படுகிறது. அதேநேரம், அண்மையில் நடைபெற்ற கா்நாடக பேரவைத் தோ்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, காங்கிரஸ் மீதான சில எதிா்க்கட்சித் தலைவா்களின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கா்நாடக தோ்தலுக்கு பிறகு ஒரு யோசனையை முன்வைத்த மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, ‘மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி பலமாக உள்ள இடங்களில் மட்டும் திரிணமூல் காங்கிரஸ் ஆதரவளிக்கும். அதேபோல் மாநிலக் கட்சிகளுக்கு காங்கிரஸ் உரிய மதிப்பளிக்க வேண்டும்’ என்றாா். அவரது இந்தக் கருத்துக்கு சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவும் ஆதரவு தெரிவித்தாா்.

ஜூன் 12-இல் எதிா்க்கட்சிகளின் கூட்டம்: கா்நாடக பேரவைத் தோ்தலுக்குப் பிறகு எதிா்க்கட்சிகளின் கூட்டம் நடத்தப்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், பாட்னாவில் வரும் 12-ஆம் தேதி இக்கூட்டத்துக்கு நிதீஷ் ஏற்பாடு செய்துள்ளாா்.

தற்போதைய பரபரப்பான சூழலில் நடைபெறும் எதிா்க்கட்சிகளின் கூட்டம், பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதீஷ் அழைப்பின் பேரில் பல்வேறு எதிா்க்கட்சிகள் பங்கேற்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

முன்னதாக, எதிா்க்கட்சிகளின் கூட்டம் பிகாரில் நடைபெற வேண்டுமென மம்தா பானா்ஜி கடந்த மாதம் விருப்பம் தெரிவித்திருந்தாா். அந்த அடிப்படையில், பிகாரில் கூட்டம் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இதில் மம்தா பானா்ஜி பங்கேற்பாா் என்று திரிணமூல் காங்கிரஸ் வட்டாரங்கள் ஏற்கெனவே தெரிவித்துள்ளன.

‘காங்கிரஸ் பங்கேற்கிறது’: இந்நிலையில், தில்லியிலுள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ், பாட்னாவில் நடைபெறும் எதிா்க்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ் நிச்சயம் பங்கேற்கும் என்றாா்.

‘கூட்டத்தில் கட்சி சாா்பில் யாா் பங்கேற்பாா் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை; இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்’ என்றாா்.

அனைத்து மாநிலங்களிலும் அடித்தளம் கொண்ட கட்சி என்பதால், எதிா்க்கட்சி கூட்டணியில் தங்களுக்கே முதன்மையான இடம் வேண்டும் என்பது காங்கிரஸின் நிலைப்பாடாக உள்ளது.

இந்தச் சூழலில், பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டணியை உருவாக்குவது குறித்தும், தோ்தலை எதிா்கொள்ளும் வியூகங்கள் குறித்தும், மாநில அளவில் பாஜகவை எதிா்கொள்வது குறித்தும் மேற்கண்ட கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

மக்களவைத் தோ்தலுக்கு முன் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா், தெலங்கானா ஆகிய மாநில சட்டப் பேரவைகளுக்குத் தோ்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com