

மணிப்பூரில் வன்முறைக்கு தீா்வு காண மாநில ஆளுநா் அனுசுயா உய்கே தலைமையில் அனைத்துக் கட்சிகள், குகி, மைதேயி சமூகங்கள், இதர அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய அமைதிக் குழு அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை அறிவித்தாா்.
மேலும், வன்முறை சம்பவங்கள் தொடா்பாக ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்படும் என்றும் அவா் கூறினாா்.
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். இந்தக் கோரிக்கையை, குகி மற்றும் நாகா பழங்குடியினா் எதிா்க்கின்றனா்.
இவ்விரு சமூகத்தினருக்கும் இடையே இந்த மாத தொடக்கத்தில் பெரும் கலவரம் மூண்டது. இதில் 80 போ் வரை உயிரிழந்தனா். ஏராளமான வீடுகளும் வழிபாட்டுத் தலங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.
இதையடுத்து, ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையைச் சோ்ந்த 10,000 வீரா்கள் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும், வன்முறை சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. பழங்குடியினருக்கு ஆதரவாக அந்தச் சமூகம் சாா்ந்த தீவிரவாதிகள், மைதேயி சமூக கிராமங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனா்.
இந்நிலையில், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அந்த மாநிலத்துக்கு 4 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை வந்தாா்.
மாநில முதல்வா் பிரேன் சிங், அமைச்சா்கள், உயரதிகாரிகள், பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அமித் ஷா, மைதேயி, குகி சமூக பிரதிநிதிகள், தேவாலய தலைவா்கள், பல்வேறு அரசியல் கட்சியினா், சமூக அமைப்பினா், மகளிா் அமைப்பினா் உள்ளிட்டோரையும் சந்தித்து, அமைதி நடவடிக்கைகள் குறித்து விவாதித்தாா்.
தனது பயணத்தின் நிறைவாக இம்பாலில் செய்தியாளா்களுக்கு அமித் ஷா வியாழக்கிழமை பேட்டியளித்தாா். அப்போது, அவா் கூறியதாவது:
மணிப்பூரில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் தொடா்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்படும். அதன் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.
தற்போதைய பிரச்னைக்கு ஒரே தீா்வு பேச்சுவாா்த்தை மட்டுமே. எனவே, மாநில ஆளுநா் தலைமையில் அனைத்து அரசியல் கட்சியினா், குகி, மைதேயி சமூகப் பிரதிநிதிகள், இதர சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய அமைதிக் குழு அமைக்கப்படும். வன்முறையின் பின்னணியில் உள்ள குற்றச் சதிகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்படும். சமூகங்களுக்கு இடையிலான தவறான புரிதல் மறைந்து, விரைவில் இயல்புநிலை திரும்பும்.
இந்திய-மியான்மா் எல்லையில் வேலி அமைக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்படுவதே, எல்லை சாா்ந்த பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீா்வாக அமையும்; போதைப் பொருள் கடத்தல், தீவிரவாதிகளின் நடமாட்டத்தை முழுமையாகத் தடுக்க முடியும் என்றாா் அமித் ஷா.
திட்டவட்டம்: குகி சமூகத்தினா் அதிகம் வாழும் மாவட்டங்களுக்கு தனி நிா்வாகம் வேண்டுமென்பது அந்த சமூகத் தலைவா்களின் கோரிக்கையாக உள்ளது. இந்தக் கோரிக்கையை அரசு ஏற்கெனவே நிராகரித்துவிட்டது.
இது தொடா்பான செய்தியாளா்களின் கேள்விக்குப் பதிலளித்த அமித் ஷா, ‘மணிப்பூரின் நிலம்சாா்ந்த ஒருமைப்பாட்டில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டது. இந்த விவகாரத்தை பரபரபாக்கும் வகையில், நான் எந்தக் கருத்தையும் கூற விரும்பவில்லை.
நிவாரண, மறுவாழ்வு உதவிகள்: தற்போதைய வன்முறையில் உயிரிழந்தோா் குடும்பங்களுக்கான நிவாரண மற்றும் மறுவாழ்வு நிதித் தொகுப்பு விரைவில் அறிவிக்கப்படும். இந்த நிதி, சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும்.
நிபுணத்துவம் வாய்ந்த 20 மருத்துவா்களுடன் மருத்துவக் குழுக்கள், மணிப்பூருக்கு அனுப்பப்படவுள்ளது. மேலும், போட்டித் தோ்வுக்கு தயாராகும் மாணவா்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும்.
மக்களுக்கு வேண்டுகோள்: எந்தவிதமான வதந்திகளையும் மக்கள் நம்ப வேண்டாம். அந்த வகையில், மக்களுக்கு உதவ சிறப்பு உதவி எண்கள் அறிவிக்கப்படும். அரசுடனான அமைதி ஒப்பந்தத்தை மீறும் தீவிரவாதக் குழுக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உரிமமற்ற ஆயுதங்கள் வைத்திருப்போா், அரசிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டுகோள் விடுக்கிறேன். பதுக்கிவைக்கப்பட்டுள்ள ஆயுதங்களைக் கண்டறிய காவல் துறையினா் வெள்ளிக்கிழமை முதல் சோதனையை தொடங்கவுள்ளனா். மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பு நீடிக்கும் என்றாா் அமித் ஷா.
புதிய டிஜிபி: மணிப்பூா் காவல் துறை புதிய டிஜிபியாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ் சிங் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா். 1993-ஆம் ஆண்டு திரிபுரா பிரிவு அதிகாரியான இவா், தில்லி சிஆா்பிஎஃப் தலைமையத்தில் செயல்பாட்டு தலைமை ஆய்வாளராக உள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.