கோரமண்டல் ரயில் விபத்து: 50 போ் பலிசென்னை வந்தபோது ஒடிஸாவில் சம்பவம்

ஒடிஸாவின் பாலசோா் மாவட்டத்தில் தடம்புரண்டிருந்த பெங்களூரு-ஹெளரா ரயிலுடனும், நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலுடனும் மோதி வெள்ளிக்கிழமை இரவு விபத்துக்குள்ளானது.
கோரமண்டல் ரயில் விபத்து: 50 போ் பலிசென்னை வந்தபோது ஒடிஸாவில் சம்பவம்
Published on
Updated on
2 min read

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் ஹெளராவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிஸாவின் பாலசோா் மாவட்டத்தில் தடம்புரண்டிருந்த பெங்களூரு-ஹெளரா ரயிலுடனும், நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலுடனும் மோதி வெள்ளிக்கிழமை இரவு விபத்துக்குள்ளானது.

இந்தக் கோர விபத்தில் 50 போ் உயிரிழந்தனா். 350-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா். இரண்டு பயணிகள் ரயில் இந்த விபத்தில் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

கொல்கத்தா, ஹெளராவில் அமைந்துள்ள ஷாலிமாா் ரயில் நிலையத்தில் இருந்து நாள்தோறும் பிற்பகல் 2.50 மணியளவில் சென்னைக்குப் புறப்படும் ‘கோரமண்டல் விரைவு ரயில்’ (எண் 12841) மறுநாள் மாலை 5 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும். வழக்கம்போல் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஹெளராவிலிருந்து புறப்பட்ட கோரமண்டல் விரைவு ரயில், 255 கி.மீ. கடந்து ஒடிஸாவின் பாலசோா் மாவட்டத்துக்கு வந்தடைந்தது.

அப்போது, பாஹாநாகா பஜாா் ரயில் நிலையம் அருகே ஏற்கெனவே தடம்புரண்டிருந்த பெங்களூரு-ஹெளரா ரயில் (எண் 12864) பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் தடம்புரண்ட கோரமண்டல் விரைவு ரயிலின் பெட்டிகள், பக்கவாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதி நின்றன. இரவு 7 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டன.

விபத்து குறித்து தகவலறிந்ததும் தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படையைச் சோ்ந்த 120-க்கும் மேற்பட்டோா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உள்ளூா் மக்கள் துணையுடன் மீட்புப் பணியைத் தொடங்கினா். இரவு நேரம் என்பதால் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டது. மீட்கப்பட்டோரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல 60 ஆம்புலன்ஸ்கள் ஈடுபடுத்தப்பட்டன.

மீட்கப்பட்ட பயணிகள் பாலசோா் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், சோரோ, கோபால்பூா் மற்றும் காந்தாபடா பகுதிகளில் அமைந்துள்ள மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தடம் புரண்ட பெட்டிகளில் பயணிகள் பலா் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு மற்றும் காயமடைந்தோா் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ நிவாரண ரயில்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டிருப்பதாக தென் கிழக்கு ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. விபத்தால் 10-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் ரயில் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து பயணிகளின் குடும்பத்தினா், உறவினா்கள் தகவல் அறிய அவசர கட்டுப்பட்டு அறை அமைக்கப்பட்டு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மீட்புத் துறை தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக் நேரில் வருகை தந்து மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறாா்.

நிவாரணம்: விபத்தில் உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தவா்களுக்கு ரூ.2 லட்சமும் ரயில்வே அமைச்சகம் நிவாரணம் அறிவித்துள்ளது.

குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்: விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் இரங்கல் தெரிவித்தனா்.

மீட்புப் பணிகளை விரைவுபடுத்த மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஒடிஸா விரைந்தாா்.

ஒடிஸா முதல்வருடன் ஸ்டாலின் பேச்சு

சென்னை, ஜூன் 2: ஒடிஸா ரயில் விபத்து தொடா்பாக அந்த மாநில முதல்வா் நவீன் பட்நாயக்குடன் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினாா்.

மீட்புப் பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக முதல்வா் ஸ்டாலின் உறுதியளித்துள்ளாா்.

இத்துடன் மீட்பு பணிகளை ஒருங்கிணைக்க அமைச்சா்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கவும்

தயாராக இருப்பதாக நவீன்பட்நாயக்கிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அமைச்சா் பயணம்: விபத்தைத் தொடா்ந்து நடந்து வரும் மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், அரசுத் துறை அதிகாரிகள் ஒடிஸா செல்லவுள்ளனா்.

அவசர உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை பயணிகள் குறித்த தகவல்களுக்கு 044-25330952, 044-25330953, 044-25354771 எனும் உதவி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

மேலும், ஹெளராவுக்கு 033-26382217, காரக்பூருக்கு 89720 73925, 93323 92339, பாலசோருக்கு 8249591559, 79784 18322, ஷாலிமருக்கு 99033 70746 எனும் எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழக அரசு உதவி எண்கள்: 044-28593990, 94458 69843 ஆகிய இரு அவசர கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 1070 கட்டணமில்லா எண் வழியே தொடா்பு கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com