அரிக்கொம்பன் யானை
அரிக்கொம்பன் யானை

அரிக்கொம்பன் யானையை மீட்டுத்தாருங்கள்: போராடும் பழங்குடியின மக்கள்

கேரள மாநிலம் இடுக்கி அருகே சின்னக்கானல் பகுதியைச் சேர்ந்த ஐந்து பஞ்சாயத்து மக்களும் அரிக்கொம்பன் யானையை தமிழகத்திலிருந்து மீட்டுத்தாருங்கள் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இடுக்கி: கேரள மாநிலம் இடுக்கி அருகே சின்னக்கானல் பகுதியைச் சேர்ந்த ஐந்து பஞ்சாயத்து மக்களும் அரிக்கொம்பன் யானையை தமிழகத்திலிருந்து மீட்டுத்தாருங்கள் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்துக்குட்பட்ட சின்னக்கானல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பிறந்த அரிக்கொம்பன், தனது இரண்டு வயதில் தாயை இழந்தது. சின்னக்கானல் வனப்பகுதியில் ஏராளமான சொகுசு பங்களாக்கள் கட்டப்பட்டதால், அதன் வலசைப் பாதை மாறி அரிக்கொம்பன் ஊருக்குள் நுழையும் நிலை உருவானது. சின்னக்கானல் பகுதியில் பொதுமக்கள் பலர் அரிக்கொம்பனால் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, அரிக்கொம்பன் யானையை கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி தமிழகத்தையொட்டிய பெரியாறு புலிகள் காப்பக வனத்தில் விட்டுச் சென்றனர். அங்கிருந்து கம்பம் நகருக்குள் நுழைந்த அரிக்கொம்பனால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.

அதன்பிறகு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சண்முகாநதி அணையிலிருந்து சின்ன ஓவுலாபுரம் - பெருமாள்மலை அடிவாரத்துக்கு இடம்பெயர்ந்த அரிக்கொம்பனை வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். கும்கி யானைகளின் உதவியுடன் அரிக்கொம்பன் லாரியில் ஏற்றப்பட்டு இப்போது திருநெல்வேலி மாவட்ட வனப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்டுள்ள அரிக்கொம்பன் யானை இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாக வனத்துறையினா் தெரிவித்தனா்.

இந்த நிலையில், இடுக்கி மாவட்டத்தில் ஐந்து பஞ்சாயத்துகளைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் சாலைகளில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாங்கள் யாரும் அரிக்கொம்பனை பிடிக்குமாறு புகார் கொடுக்கவில்லை. உடனடியாக கேரள வனத்துறை தமிழகத்திலிருந்து அரிக்கொம்பனை மீட்டு இங்கு கொண்டு வர வேண்டும். 

அவனை வனதுறையினர் பிடித்து, டிரக்கில் ஏற்றி 24 மணி நேரம் பயணித்து கோதையாறு பகுதிக்குக் கொண்டு செல்லும்போது அவனது கை மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டிருப்பதைப் பார்க்கும் போது எங்களுக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. ஒருவேளை அரிக்கொம்பனை மீட்டு அழைத்து வராவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும். சின்னக்கானல் பகுதியிலேயே அரிக்கொம்பனை மீண்டும் கொண்டு வந்து விட வேண்டும் என்று பழங்குடியின மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

அரிக்கொம்பன் இங்கு வராவிட்டால், யாரும் வாக்கு கேட்டு இங்கு வர முடியாது. வரும் தேர்தலையே ஒட்டுமொத்தமாக புறக்கணிப்போம் என்றும் பழங்குடியின மக்கள் ஆவேசத்துடன் கூறியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com