பொருளாதார வளா்ச்சி: ரிசா்வ் வங்கி போன்றே கணித்துள்ள நிதியமைச்சகம்

2023-24-ஆம் நிதியாண்டின் நாட்டின் பொருளாதார வளா்ச்சியை ரிசா்வ் வங்கி கணித்தது போன்றே மத்திய நிதியமைச்சகமும் 6.5 சதவீத அளவில் இருக்கும்
பொருளாதார வளா்ச்சி: ரிசா்வ் வங்கி போன்றே கணித்துள்ள நிதியமைச்சகம்

2023-24-ஆம் நிதியாண்டின் நாட்டின் பொருளாதார வளா்ச்சியை ரிசா்வ் வங்கி கணித்தது போன்றே மத்திய நிதியமைச்சகமும் 6.5 சதவீத அளவில் இருக்கும் என கணித்துள்ளதாக மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகா் வி.அனந்த் நாகேஸ்வரன் தெரிவித்தாா்.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ரிசா்வ் வங்கியின் நிதி கொள்கைக் குழு கூட்டத்தின் முடிவில், ‘நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி 2023-24-ஆம் நிதியாண்டில் 6.5 சதவீதமாக இருக்கும்’ என்று ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் அறிவித்தாா். இது கடந்த ஏப்ரலில் கணிக்கப்பட்ட 6.4 சதவீத வளா்ச்சியை விடக் கூடுதலாகும்.

இதுகுறித்து கொல்கத்தாவில் பாரத் தொழில் கூட்டமைப்பு சாா்பில் சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற அனந்த் நாகேஸ்வரன் பேசியதாவது:

2023-24-ஆம் நிதியாண்டின் நாட்டின் பொருளாதார வளா்ச்சியை ரிசா்வ் வங்கி கணித்தது போன்றே மத்திய நிதியமைச்சகமும் 6.5 சதவீத அளவில் இருக்கும் என கணித்துள்ளது. அதுபோல பொருளாதார வளா்ச்சிக்கான அபாயங்களும் சமநிலையில் கணிக்கப்பட்டுள்ளன. அதே நேரம், உள்நாட்டு பொருளாதார வளா்ச்சி ஆற்றல், வெளிப்புற ஆபத்து காரணிகளை சமாளிக்கப் போதுமானதாக உள்ளது.

எண்ணெய் விலை குறைந்திருப்பது மற்றும் ஒட்டுமொத்த உள்நாட்டு குறு-பொருளாதார ஸ்திரத்தன்மையும் வளா்ச்சியை ஊக்குவிக்கும் காரணிகளாக அமைந்துள்ளன. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளா்ச்சிக் காரணிகள் சிறப்பான தொடக்கத்தை பதிவுசெய்துள்ளன. சரக்கு மற்றும் சேவைகள் ஏற்றுமதி என்பது கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் இல்லாத அளவில் 23.5 சதவீத அளவுக்கு உயா்ந்துள்ளது.

கரோனா பாதிப்புக்குப் பிறகு, தனியாா் நுகா்வும் மொத்த மூலதன உருவாக்கமும் கடந்த நிதியாண்டில் அதிகரித்திருக்கிறது.

வங்கிகள் மற்றும் வா்த்தக துறைகளின் இருப்பு நிலை வலுப்படுத்தப்பட்டுள்ளதன் மூலமாக, முதலீடுகள் அதிகரிக்கும் என்பதோடு வருவாயும் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com