மோடி ஆட்சியில் நாட்டின் கடன் ரூ.155 லட்சம் கோடி உயர்வு? - காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் நாட்டின் கடன் ரூ. 155 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதனால் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கான கடன் சுமை ரூ.1.20 லட்சமாக உயர்ந்துள்ளது
Supriya Shrinate
Supriya Shrinate


புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் நாட்டின் கடன் ரூ. 155 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதனால் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கான கடன் சுமை ரூ.1.20 லட்சமாக உயர்ந்துள்ளது என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தற்போது தேசிய அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கி நாடு முழுவதும் பாஜக சாா்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் நாட்டின் கடன் கிட்டத்தட்ட "மூன்று மடங்கு" ரூ.155 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று காங்கிரஸ் சனிக்கிழமை குற்றம் சாட்டியது மற்றும் பொருளாதாரத்தின் நிலை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என கோரியது.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட், மோடி அரசாங்கத்தின் தவறான பொருளாதார நிர்வாகமே பொருளாதாரத்தின் தற்போதைய நிலைக்கு காரணம் என்று குற்றம் சாட்டினார். மேலும் “குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, அரசியலில் எதிர்பக்கத்தில் இருந்தவர்களை திறமையற்றவர்கள், ஊழல்வாதிகள் என்று குற்றம்சாட்டினார். ஆனால் இன்று அவருக்கும், அவரது அரசாங்கத்துக்கும் இதைவிட சரியான சொற்கள் இருக்க முடியாது. 

67 ஆண்டுகளில் 14 பிரதமர்களின் கீழ் அதாவது 2014 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் மொத்த கடனானது ரூ.55 லட்சம் கோடியாக இருந்த நிலையில், மோடி தலைமையிலான 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் தற்போது இந்தியாவின் மொத்த கடன் ரூ.100 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது. பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் தான் இந்தியாவின் கடன் ரூ.155 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.

இதனால் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கான கடன் சுமை ரூ.1.20 லட்சமாக உயர்ந்துள்ளது. மோடி அரசு தனது ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு வினாடியும் ரூ.4 லட்சம் கடனாக வாங்கியிருக்கிறது. இந்த கடனுக்கு அரசு ஆண்டுக்கு ரூ. 11 லட்சம் கோடி வட்டி செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் பாதையை சீரழித்து, மிகப்பெரிய அளவில் வேலைலையின்மையை உருவாக்கி, பணவீக்கத்தை அதிகரித்திருக்கிறது மோடி அரசு. 

"பொருளாதார மேலாண்மை என்பது ஊடக தலையங்க மேலாண்மை போன்றது அல்ல. அதை டெலிப்ராம்ப்டர்கள் மூலமாகவோ,வாட்ஸ்ஆப் ஃபார்வர்டு மூலமாகவே  நிச்சயமாக செய்ய முடியாது. எனவே நாட்டின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையை நாங்கள் கோருகிறோம், ஏனெனில் தவறு கோடுகள் இன்னும் ஆழமாகி வருகின்றன, ”என்று அவர் கூறினார்.

மேலும், “நாட்டின் மொத்த செல்வத்தில் வெறும் மூன்று சதவிகிதத்தை வைத்திருக்கும் அடித்தட்டு மக்களான 50 சதவிதம்  பேர், 64 சதவிகிதம் ஜிஎஸ்டி செலுத்துகின்றனர். மறுபுறம், நாட்டின் 80 சதவிகிதம் செல்வத்தை வைத்திருக்கும் முதல் பணக்காரர்களான 10 சதவிதம் பேர் வெறும் 3-4 சதவிகிதம் மட்டுமே ஜிஎஸ்டி செலுத்துகின்றனர் ” என்று ஷ்ரினேட் கூறினார்.

விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டம், வருமான ஏற்றத்தாழ்வு தவிர முக்கிய பிரச்னைகளாக உருவெடுத்துள்ளன என்று ஷ்ரினேட் கூறினார். 

உலக அளவில் இந்தியாவில் தான் சமையல் எரிவாயு உருளையின் விலை அதிகமாக உள்ளது. பெட்ரோல் விலையில் மூன்றாவது இடத்திலும், டீசல் விலையில் எட்டாவது இடத்திலும் உள்ளது என்று அவர் கூறினார்.

நாட்டின் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 84 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்றும், மற்ற வளரும் மற்றும் வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்களுடன் ஒப்பிடும் போது, சராசரி கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 64.5 சதவிகிதமாக உள்ளது.

“பெருகிவரும் கடனை அடைக்க அரசுக்கு ஆண்டுக்கு ரூ.11 லட்சம் கோடி செலவாகிறது. நாட்டின் கடன் சேவைத் திறன் குறித்து இப்போது கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மத்திய கணக்கு தணிக்கை(சிஏஜி) அறிக்கையின்படி, 2019-20 ஆம் ஆண்டில் அரசாங்கக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52.5 சதவிதமாக இருந்தது மற்றும் அந்த ஆண்டு கடன் நிலைத்தன்மை எதிர்மறையாக மாறியது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 84 சதவிகிதம் கடன் இருப்பதால், கடன் நிலைத்தன்மை சந்தேகத்திற்குரியதாக," உள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.

"ஆனால், இந்த உயரும் கடனின் பயனாளிகள் யார் என்பது பெரிய கேள்வி, ஏனென்றால் அது ஏழைகள் அல்ல, நடுத்தர வர்க்கம் அல்ல, சிறு,குறு தொழில் நிறுவனங்கள் அல்ல. இருபத்தி மூன்று கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுள்ளனர், 83 சதவிகித இந்தியர்கள் தங்கள் வருமானத்தில் வீழ்ச்சியடைந்துள்ளனர். ஒரே ஆண்டில் 11,000க்கும் மேற்பட்ட சிறு,குறு தொழில் நிறுவனங்கள்  மூடப்பட்டன, ஆனால் இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 102 இல் இருந்து 166 ஆக உயர்ந்துள்ளது. 

"ஆனால், அதிகக் கடன் பெற்ற இந்த பணக்காரப் பயனாளிகள் அனைவரும் இந்தியாவின் வளர்ச்சியில் தங்கள் பங்கை ஆற்றுகிறார்களா அல்லது அதிக வரி செலுத்துகிறார்களா?" வரி வசூல் தொடர்பான மற்ற முக்கியப் பிரச்னையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

“ஜிஎஸ்டி அல்லது எரிபொருளின் மீதான கலால் வரி போன்ற மறைமுக வரிகள் ஏழைகளை மிகவும் பாதித்துள்ளது என்பதை அரசாங்கம் தெளிவாக மறுக்கிறது. இந்தியாவின் நுகர்வு தொடர்ந்து பலவீனமாக உள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளிவிவரங்களை அரசாங்கம் மிகப் பெரிய சாதனையாகக் கூறுகின்றனர். இந்தியாவின் நுகர்வு-ஜிடிபி விகிதம் 2022 நிதியாண்டில் 61.1 சதவிகிதத்தில் இருந்து 2023 நிதியாண்டில் 60.6 சதவீதமாகக் குறைந்துள்ளது," என்று ஷ்ரினேட் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com