ஒடிசா ரயில் விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு: மொத்த பலி 289 ஆனது!
ஒடிசாவில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தில் மேலும் ஒருவர் பலியான நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 289 ஆக உயர்ந்துள்ளதாக கட்டாக்கின் எஸ்சிபி மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
ரயில் விபத்தில் பலியான பிகாரைச் சேர்ந்த பிஜய் பஸ்வான் ரயில் விபத்துக்கு ஒரு நாளுக்கு பின், ஜூன் 3-ம் தேதி முதுகெலும்பு பாதிக்கப்பட்ட நிலையில் பல்வேறு காயங்களுடன் கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
கடந்த 10 நாள்களாக சிகிச்சை பெற்றுவந்த பஸ்வானுக்கு திங்கள்கிழமை இரவு உயர் ரத்தஅழுத்தம் அதிகமானது. இந்நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து, சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை(ஜூன்13) காலை உயிரிழந்தார்.
இதையடுத்து ஒடிசா கோர ரயில் விபத்தில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை தற்போது 289 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஜூன் 2-ஆம் தேதி பாலாசோர் மாவட்டத்தின் பஹங்கா பஜாரில் அடுத்தடுத்து மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.