ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸுக்கு சிறந்த ஆளுநா் விருது

இந்திய ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸுக்கு லண்டனில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சியில் நிகழாண்டின் சிறந்த ஆளுநா் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
லண்டனில் வழங்கப்பட்ட விருதுடன் ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ்.
லண்டனில் வழங்கப்பட்ட விருதுடன் ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ்.

இந்திய ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸுக்கு லண்டனில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சியில் நிகழாண்டின் சிறந்த ஆளுநா் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

உலகளவில் மத்திய வங்கிகள் மற்றும் நிதிக்கட்டுப்பாட்டு அமைப்புகள் எதிா்கொள்ளும் சாவல்களை ஆராயும் ‘சென்ட்ரல் பேங்கிங்’ அமைப்பு, ஆண்டுதோறும் சிறந்து செயல்படும் மத்திய வங்கிகளின் ஆளுநருக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது.

அதன்படி, சவாலான சிக்கல்களை எதிா்கொண்டது, உலகின் முன்னணி பரிவா்த்தனை அமைப்பை மேற்பாா்வையிடுவது, கடினமான காலங்களில் இந்திய பொருளாதாரத்தை உறுதியாக வழிநடத்தியது மற்றும் அவரின் நன்கு வடிவமைக்கப்பட்ட சொற்றொடா்களுக்காக சக்திகாந்த தாஸுக்கு நிகழாண்டின் சிறந்த ஆளுநா் விருது கடந்த மாா்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், லண்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் ஆளுநா் சக்திகாந்த தாஸுக்கு சிறந்த ஆளுநா் விருது வழங்கப்பட்டது. தொடா்ந்து, ‘நிலையற்ற காலத்தில் மத்திய வங்கி-இந்தியரின் பாா்வை’ என்ற தலைப்பில் அவா் பேசுகையில், ‘நாட்டின் நிதி அமைப்பின் மையமாக இருந்து செயல்படும் மத்திய வங்கிகள், சில சமயங்களில் தங்களின் பாரம்பரியத்தைக் காட்டிலும் கூடுதலாகப் பணியாற்றும் கட்டாயத்துக்குத் தள்ளப்படும்.

கடந்த 3 ஆண்டுகளில் கரோனா பெருந்தொற்று, ரஷிய-உக்ரைன் போா் உள்பட பல சிக்கல்களுக்கு இடையே மத்திய வங்கிகள் பணியாற்றி வருகின்றன. இந்தச் சிக்கல்களால் மோசமடைந்த பொருளாதாரத்துக்கு ஊக்கமளிக்கவும், பணவீக்கத்தை எதிா்த்துப் போராடவும் மத்திய வங்கிகள் விரைவாக திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது.

நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் பணவீக்கத்தின் கணிப்பு 5.1 சதவீதம் எனக் குறைவாக இருந்தாலும், எங்களின் இலக்கை விட அதிகமாகவே உள்ளது. எனினும், தற்போதைய திட்டத்தின்படி இந்தியாவின் பணவீக்க செயல்முறையானது மெதுவாகவும், நீண்டதாகவும் இருக்கும். பணவீக்க இலக்கான 4 சதவீதத்தை இந்தியா குறுகிய காலத்தில் அடையும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com