கோப்புப்படம்
கோப்புப்படம்

தொடர் ரயில் விபத்துகள் ஏற்படுத்தும் அச்சம்!

ஒடிசாவில் கடந்த வாரம் ஏற்பட்ட ரயில் விபத்து உலகையே உலுக்கி இருக்கிறது. அதுகுறித்த சர்ச்சைகளும் பரபரப்புச் செய்திகளும் இன்னமும் ஓய்ந்தபாடில்லை.
Published on

ஒடிசாவில் ஜூன் முதல் வாரம் ஏற்பட்ட ரயில் விபத்து உலகையே உலுக்கி இருக்கிறது. அதுகுறித்த சர்ச்சைகளும் பரபரப்புச் செய்திகளும் இன்னமும் ஓய்ந்தபாடில்லை.

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே கோரமண்டல் விரைவுரயில், யஸ்வந்த்பூர் அதிவிரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி தடம் புரண்டு பயங்கர விபத்துக்குள்ளாகின. இதில் 289 பேர் பலியாயினர். மேலும் 1100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 89 பேரது உடல்கள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை. 

இந்தியாவில் ரயில் விபத்துகள் நடப்பது புதிதில்லை என்றாலும் கடந்த 30 ஆண்டுகள் இல்லாத அளவில் மிகப் பெரிய ரயில் விபத்து நடந்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது..

மக்கள் அதிலிருந்து மீண்டு வருவதற்குள் தொடர்ந்து அதுபோன்ற ரயில் விபத்துச் செய்திகள் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்துவதாக உள்ளது.

தொடர்ந்து நிகழும் ரயில் விபத்துகள்

ஜூன் 5 -   ஒடிசா மாநிலத்தின் பர்கர் மாவட்டத்தில் தனியார் ஆலைக்கு சுண்ணாம்பு ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது. அதேபோல ஜூன் 7, மத்திய பிரதேசம் ஜபல்பூர் மாவட்டத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

ஜூன் 7, ஒடிசாவில் சரக்கு ரயில் அங்கு பணியில் இருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் மீது மோதியதில் 6 பேர் பலியாயினர். 2 பேர் படுகாயமடைந்தனர்.

ஜூன் 8, ஒடிசாவில் பூரி துர்க் விரைவு ரயில் நுவாபாடா மாவட்டத்தில் உள்ள காமியர் சாலை அருகே இரவு 11 மணியளவில் சென்றபோது ஏசி பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டது அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை.  

ஜூன் 8, நீலகிரி மாவட்டம் குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரயில் தடம் புரண்டது.

ஜூன் 11, சென்னை முதல் திருவள்ளூர் வரை இயக்கப்படும் புறநகர் ரயில் பேசின்பாலம் ரயில் நிலையம்  அருகே தடம் புரண்டது. இதுபோன்று ரயில் விபத்துக்களும் அது தொடர்பான செய்திகளும் வந்துகொண்டேயிருக்கின்றன.

ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தை தொடர்ந்து ரயில் விபத்துகளும் அது தொடர்பான செய்திகளும் தொடர்ந்து வெளிவருவதால் ரயிலில் பயணம் செய்யும் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தலாம். இதனால் விபத்து நடந்த முதல் வாரத்தில் ரயிலில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. அந்த வாரத்தில் தனியார் பேருந்துகளின் கட்டணமும் விமானங்களின் கட்டணமும் அதிகரித்ததே இதற்கு சான்றாகவும் இருந்தது. 

விபத்தின் காரணமாக குறிப்பிட்ட சில ரயில்களின் வழித்தடங்கள் மாற்றப்பட்டன. சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. எனவே, அந்த வாரத்தில் பெங்களூரு, புவனேஸ்வர், கொல்கத்தா, விசாகப்பட்டினம், ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் விமானக்கட்டணங்கள் இரட்டிப்பாயின. வழக்கமாக புவனேஸ்வரிலிருந்து கொல்கத்தா செல்வதற்கான  விமான கட்டணம்  ரூ.3500லிருந்து ரூ.6000ஆக இருந்த நிலையில் ஜூன் 4 அன்று ரூ.12,000 வரை உயர்ந்தது. 

ஆனால் இந்த நிலை படிப்படியாக மாறியது. மீண்டும் ரயிலில் முன்பதிவு விறுவிறுப்படைந்தது. ரயில்கள் முழுவதும் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. காரணம், பொருளாதார அடிப்படையில் ரயில் பயணம் அனைவருக்கும் ஏதுவானதாக இருப்பதுதான். பொருளாதார மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக அதிகப் பயணிகள் ரயில் பயணத்தையே நாடுவர். எனவே, மக்கள் அதிகம் பயணிக்கும் ரயில் பயணத்தை பாதுகாப்பான பயணமாக மாற்றுவதற்கு ரயில்வே நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதலாக, ரயிலில் பாதுக்காப்பாக பயணம் செய்வதற்கு ஒரு சில வழிமுறைகள்..

ரயில் விபத்தைச் சந்திக்கும் பொழுது முன்னோக்கி பார்த்து அமர்ந்துக் கொண்டிருப்பவர்கள் முன்னோக்கி தள்ளப்படுவார்கள். அதுவே நாம் பின்னோக்கி பார்த்து அமர்ந்திருந்தால் இருக்கையை நோக்கி தள்ளப்படுவோம். ஏற்கனவே நம்முடைய முதுகு பகுதி பின் பக்கத்தை சப்போர்ட் செய்தவாறு இருக்கும் என்பதால் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது. ஆனால், முன்னோக்கி பார்த்தவாறு அமர்ந்திருப்பவர்களுக்கு இது ஆபத்தான சூழலை ஏற்படுத்தலாம்.

அவசரகால வெளியேற்றத்தை ரயிலில் ஏறியவுடன் அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும். எளிதில் அடையாளம் காண வேண்டும் என்பதற்காக அந்த பகுதி சிவப்பு நிறத்தில் அடையாள படுத்தப்பட்டிருக்கும். 

வயதானவர்களும் குழந்தைகளும் முடிந்தவரையில் மேல் படுக்கையைத் தேர்வு செய்வதைத்தடுக்கவும்.

ரயில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக வெளியேற முயற்சி செய்ய வேண்டும். உடமைகளை பத்திரப்படுத்துவதில் நேரத்தை வீணடிக்க வேண்டாம். 

ரயிலில் தீ விபத்து ஏற்பட்டால் எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.

இதுபோன்ற நடைமுறைகளை தெரிந்து வைத்துக்கொள்வதன் மூலம் விபத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com