‘அமிர்த காலம்’ என்றால் ஏன் இப்படி வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கின்றன?- ராகுல் காந்தி கேள்வி

‘அமிர்த காலம்’ என்றால் ஏன் இப்படி வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கின்றன? என்று மத்திய அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ள ராகுல் காந்தி
‘அமிர்த காலம்’ என்றால் ஏன் இப்படி வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கின்றன?- ராகுல் காந்தி கேள்வி
Published on
Updated on
1 min read

புதுதில்லி:  ‘அமிர்த காலம்’ என்றால் ஏன் இப்படி வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கின்றன? என்று மத்திய அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ள ராகுல் காந்தி, ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி வேலை வழங்குவதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்திவிட்டு, வேலைகளை அதிகரிப்பதற்கு பதிலாக, லட்சக்கணக்கான வேலைகளை "ஒழித்தனர்" என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

"நாட்டின் பெருமையாக கருதப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் வேலை பெறுவது இளைஞர்களின் கனவாக இருந்தது; ஆனால், பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு மொத்தமாக மறந்துவிட்டது; பொதுத்துறை நிறுவனங்களில் 2014 ஆம் ஆண்டு 16.9 லட்சமாக இருந்த வேலைவாய்ப்பு, 2022 இல் 14.6 லட்சமாக குறைந்துள்ளது.

வளர்ச்சியை நோக்கி செல்லும் நாட்டில் வேலைவாய்ப்புகள் குறையுமா?
பிஎஸ்என்எல்  நிறுவனத்தில் 1,81,127 பேர், செயில் நிறுவனத்தில் 61,928 பேர், எம்டிஎல்என்எல் நிறுவனத்தில் 34,997 பேர், எஸ்இசிஎல் நிறுவனத்தில் 29,140 பேர், எப்சிஎல் நிறுவனத்தில் 28,063 பேர், ஓஎன்ஜிசி நிறுவனத்தில் 21,120 பேர் வேலைகளை இழந்துள்ளனர்.  

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என பொய்யான வாக்குறுதி கொடுத்தவர்கள், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோரை வேலையை விட்டு நீக்கியுள்ளனர். 

இது மட்டுமில்லாமல், பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த பணியாளர்கள் தேர்வை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளனர். இது, அரசியலமைப்பு அளித்துள்ள இட ஒதுக்கீட்டு உரிமையை மறுப்பதற்கான நடவடிக்கை ஆகாதா? அல்லது பொதுநிறுவனங்களை தனியார்மயமாக்கும் சதியா?

தொழிலதிபர்களின் கடன்கள் தள்ளுபடி, பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து அரசு வேலைகள் ஒழிப்பு போன்றவை எந்த வகையான  ‘அமிர்த காலம்’ ? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.  

மேலும், உண்மையிலேயே இது  ‘அமிர்த காலம்’ என்றால் ஏன் இதுபோன்ற வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகின்றன?, ஒரு சில "பணக்கார நண்பர்களின்" நலனுக்காக லட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கை நசுக்கப்படுவதுடன், நாடு வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்கித் தவிக்கிறது" என்று குற்றம் சாட்டினார். 

நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் சரியான சூழலையும், அரசாங்கத்தின் ஆதரவையும் பெற்றால் அவற்றால் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும். பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டின் சொத்து. அவை நாட்டின் முன்னேற்றப்பாதையை வலுப்படுத்தும் வகையில் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று ராகுல் தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com