ஜூன் 20 அகதிகள் நாள்: அறிய வேண்டிய தகவல்கள்

உலகம் முழுவதும் உள்ள அகதிகளை நினைவுகூறும் வகையில் ஜூன் 20 அன்று உலக அகதிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
refugee045515
refugee045515

உலகம் முழுவதும் உள்ள அகதிகளை நினைவுகூறும் வகையில் ஜூன் 20 அன்று உலக அகதிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தனது சொந்த நாடுகளிலிருந்து துரத்தப்பட்டோ அல்லது போர் சூழலின்போதும், தீவிரவாத தாக்குதலின் போதும், இயற்கை சீற்றங்களின்போதும்  உயிரை பாதுகாத்துக்கொள்ள வேறு நாடுகளில் மக்கள் தஞ்சம் புகுகின்றனர். இவர்களையே அகதிகள் எனக் கூறுகிறோம். 

இவர்களின் நோக்கம் உயிரை பாதுகாத்துக்கொள்வதே. உணவு, உடை, இருப்பிடம் என்ற எந்த அடிப்படை தேவைகளும் இல்லாமல் உயிரோடு இருந்தால்  மட்டுமே போதும் என்ற குறைந்தபட்ச தேவையோடு மட்டுமே இவர்கள் சொந்த  நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு தஞ்சம் புகுகின்றனர். இதுவரை எந்தநாட்டிலும் அகதிகளுக்கு, அந்நாட்டு குடிமக்களுக்கு சட்ட ரீதியாக வழங்கப்படும் சம உரிமை வழங்கப்படுவதில்லை என்பது அனைவரும் அறிந்ததே .

இந்த நிலையில்தான் உலக அகதிகள் தினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால் இந்த தினம்தான் அகதிகள் பற்றிய புரிதலையும் அவர்களின் அன்றாட வாழ்கை நிலையையும் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் நினைவுகூற உதவுகிறது.

ஜூன் 20, 1951 அன்று முதன்முதலில் அகதிகளின் நிலை தொடர்பாக மாநாடு ஜெனீவாவில்  நடத்தப்பட்டது. அந்த மாநாட்டின் 50ஆவது ஆண்டை நினைவுகூறும் விதமாக டிசம்பர் மாதம் 2000இல் அகதிகள் தினம் குறித்த அறிவிப்புகள் ஐக்கிய நாடுகள் சபை மூலமாக அறிவிக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டுக்கு முன்புவரை இந்தநாள் ஆப்பிரிக்க அகதிகள் தினம் என்று அழைக்கப்பட்டது. பிறகு உலக அகதிகள் தினம் என்று பெயர் மாற்றப்பட்டு உலகளவில் உள்ள அகதிகளை ஊக்குவிக்கிறது.

அகதிகள் அதிகம் கொண்ட நாடு 

உலகம் முழுவதிலும் மொத்தமாக 840 லட்சம் மக்கள் தனது சொந்த நாட்டை விடுத்து அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். அதில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கும்பொழுதே அகதிகளாக பிறக்கின்றனர். 37 லட்சத்துக்கும் அதிகம் அகதிகள் வாழும் நாடாக துருக்கி உள்ளது.

இந்தியாவில் அகதிகள் நிலை

இந்தியாவிலும் பல்வேறு காலங்களில் அகதிகள் வந்துள்ளனர். இந்திய அரசும் அவர்களுக்கு அடைக்கலம் வழங்கியுள்ளது. வங்கதேசம், திபெத், இலங்கை, மியான்மர் எனப் பல்வேறு நாட்டுமக்கள் இந்தியாவில் தற்போது அகதிகளாகஉள்ளனர்.இதுவரை அகதிகள் பாதுகாப்பிற்கென்று இந்தியாவில் தனியான சட்டங்கள் எதுவும் கிடையாது. பொதுவாக தெற்காசிய நாடுகள் எங்குமே அகதிகளுக்கான சட்டங்கள் இல்லை.

ஒரு நாட்டிலிருந்து வரும் அகதிகள் அனைவரும் மொத்தமாக ஒரே இடத்தில் தங்க வைக்கப்படுவதில்லை. இந்தியாவிலும் இதே நடைமுறைதான். சீன எல்லையான திபெத்திலிருந்து வந்த அகதிகள் இந்தியாவின் பல பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தமிழ்நாடு, கர்நாடகாபோன்ற இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு ஒரு குறிப்பிட்ட நாட்டிலிருந்து வரும் அகதிகள் அனைவரையும் ஒரே இடத்தில் பெரும்பாலான நாடுகள் தங்கவைப்பதில்லை. இதற்கு கரணம் எதிர்காலத்தில் அந்த இடத்திற்கான உரிமையை அவர்கள் கோரி சொந்தம் கொண்டாட  வாய்ப்புள்ளதாக ஒவ்வொரு நாட்டு அரசும் கருதுகிறது.

தமிழகத்தில் ஏறத்தாழ 59,000 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக உள்ளனர். அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் உள்ள தமிழர்களுக்காகப் போராடும் அதேநேரம் இங்குள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து கூடுதலாகப் பேசவேண்டிய தேவை உள்ளது.

அகதிகளின் பயணம் என்பது வாழ்க்கைக்கான போராட்டம்தான். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வாக்கியதோடு இந்த ஆண்டு அகதிகள் தினத்தை நினைவு கூர்வோம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com