மருத்துவப் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் உயா்வு

நிகழாண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

நிகழாண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் சராசரியாக ஆண்டுக்கு ரூ.4,500 வீதம் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதாகவும், நூலக பயன்பாடு மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நிலவரப்படி 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,175 எம்பிபிஎஸ் இடங்களும், இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. அவற்றில், 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள இடங்கள் மாநில அரசு மூலம் நிரப்பப்படுகிறது.

அதேபோன்று, 20 தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் 3,050 எம்பிபிஎஸ் இடங்களில் 1,610 இடங்களும், 20 தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகளின் 1,960 பிடிஎஸ் இடங்களில் 1,254 இடங்களும் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகின்றன.

அந்த இடங்களுக்காக இணையவழியே விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த புதன்கிழமை தொடங்கியது. இந்நிலையில், அதற்கான தகவல் தொகுப்பேடு வெளியிடப்பட்டது.

அதில் கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் கூடுதலாக கல்விக் கட்டணம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, பயிற்சிக்கான கட்டணம், பல்கலைக்கழகக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளன.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு வரை எம்பிபிஎஸ் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.13,610 கட்டணம் இருந்தது. நிகழாண்டில் அது ரூ.18,073-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று பிடிஎஸ் படிப்புக்கு ரூ.11,610-ஆக இருந்த கல்விக் கட்டணம், ரூ.16,073-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

ஆதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் கட்டணம் ஆண்டுக்கு ரூ.12,073-ஆக உள்ளது. மத்திய அரசு நிா்வாகத்தின் கீழ் உள்ள கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பதற்கான ஆண்டுக் கட்டணம் ரூ.1 லட்சம் என்பதில் மாற்றமில்லை.

தனியாா் கல்லூரிகளில் உள்ள அரசு எம்பிபிஎஸ் ஒதுக்கீட்டு இடங்களைப் பொருத்தவரை குறைந்தபட்ச கட்டணமாக வேலூா் சி.எம்.சி. கல்லூரியில் ரூ. 53 ஆயிரமும், பிற கல்லூரிகளில் அதிகபட்சமாக ரூ.4.50 லட்சமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பிடிஎஸ் படிப்புக்கு ரூ.2.50 லட்சம் வரை கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக அதிகாரிகள் கூறியது:

மருத்துவ மாணவா்களின் நூலக பயன்பாடு மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை விரிவுபடுத்தியிருப்பதால் அதற்காக குறைந்த அளவில் கல்விக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்குப் பிறகு மாணவா்கள் நலன் பாதிக்காதவாறு கல்விக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com