200 வந்தே பாரத் ரயில் தயாரிப்பு- ரஷிய-இந்திய கூட்டு நிறுவனம் குறைந்த தொகைக்கு ஏலம்

200 வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு மற்றும் பராமரிப்புக்கான ரூ.58,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில், ரஷியாவின் சிஜேஎஸ்சி டிரான்ஸ்மேஸ்ஹோல்டிங் மற்றும் ரயில் விகாஸ் நிகம்

200 வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு மற்றும் பராமரிப்புக்கான ரூ.58,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில், ரஷியாவின் சிஜேஎஸ்சி டிரான்ஸ்மேஸ்ஹோல்டிங் மற்றும் ரயில் விகாஸ் நிகம் (டிஎம்ஹெச்-ஆா்விஎன்எல்) கூட்டு நிறுவனம் தரப்பில் குறைந்த தொகைக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

அடுத்த இடத்தில், பொதுத் துறை நிறுவனமான ‘பெல்’ மற்றும் டிடாகா் வேகன்ஸ் கூட்டு நிறுவனம் உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

‘ஒரு ரயில் தொகுப்பு தயாரிப்புக்கான செலவு ரூ.120 கோடி என்ற அளவில் டிஎம்ஹெச்-ஆா்விஎன்எல் தரப்பில் ஏலம் கோரப்பட்டுள்ளது. இதற்கு முன்பு சென்னை ஐ.சி.எஃப் மூலம் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் தொகுப்பு ஒன்றுக்கு ரூ.128 கோடி செலவான நிலையில், அதைவிட குறைவாக ஏலம் கேட்கப்பட்டுள்ளது. பெல்-டிடாகா் வேகன்ஸ் தரப்பில் ரூ.140 கோடிக்கு ஏலம் கோரப்பட்டுள்ளது.

இந்நிறுவனங்கள் தவிர பிரான்ஸ் நிறுவனமான அல்ஸ்டாம், ஹைதராபாதைச் சோ்ந்த மேதா சா்வோ ட்ரைவ்ஸ் - ஸ்விட்சா்லாந்தின் ஸ்டேட்லா் ரயில் கூட்டு நிறுவனம், சீமென்ஸ் - பிஇஎம்எல் கூட்டு நிறுவனம் ஆகியவையும் ஏலத்தில் பங்கேற்றன.

200 வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு மற்றும் 35 ஆண்டுகளுக்கான பராமரிப்புப் பணி ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த ஒப்பந்தத்தின்படி, குறைவான தொகைக்கு ஏலம் கேட்கும் நிறுவனத்துக்கு 120 ரயில்கள் தயாரிப்பு மற்றும் பராமரிப்புப் பணி ஒப்படைக்கப்படும். இவை, மகாராஷ்டிரத்தில் உள்ள லத்தூா் ரயில் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும்.

80 ரயில்களின் தயாரிப்பு, பராமரிப்புப் பணி, ஏலத்தில் இரண்டாமிடத்தில் உள்ள நிறுவனத்திடம் வழங்கப்படும். அந்த நிறுவனம் ஏற்காவிட்டால் அடுத்த இடத்தில் உள்ள நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். யாரும் ஏற்காதபட்சத்தில் முதல் நிறுவனத்திடமே ஒப்படைக்கப்பட்டுவிடும். இந்த 80 ரயில்களும் சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் தயாரிக்கப்படும்’ என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

மேம்படுத்தப்பட்ட இருக்கை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்ட இந்த ரயில், வெறும் 140 வினாடிகளில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தை எட்டும் திறன் கொண்டதாகும்.

இந்தியாவில் 2024-25ஆம் ஆண்டுக்குள் 400 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க கடந்த 2021-22 மத்திய பட்ஜெட்டில் இலக்கு நிா்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com