உண்மை வெல்லும்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் கௌதம் அதானி

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை வரவேற்கும் கௌதம் அதானி உண்மை வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.
உண்மை வெல்லும்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் கௌதம் அதானி
உண்மை வெல்லும்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் கௌதம் அதானி

புது தில்லி: அதானி - ஹிண்டென்பர்க் விவகாரத்தை விசாரிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் நிபுணர் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை வரவேற்கும் கௌதம் அதானி உண்மை வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.

அதானி குழுமத்தின் மீது ஹிண்டென்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் எழுப்பிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க நிபுணர் குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வரவேற்றிருப்பதாகக் கூறும் கௌதம் அதானி, இதன் மூலம் இறுதி முடிவு கிடைக்கும் என்றும் உண்மை வெல்லும் என்றும் தெரிவித்துள்ளார்.

இன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நெறிமுறை குழு தேவை என்பதை உணர்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏம்.எம். சப்ரே தலைமையில் குழு அமைத்து உத்தரவு பிறப்பிப்பதாகவும், இந்த குழுவில், முன்னாள் நீதிபதிகள் ஓ.பி. பட், ஜே.பி. தேவ்தத், கேவி காமத், நந்தன் நீலகேணி ஆகியோர் சிறப்பு நிபுணர் குழுவில் இடம்பெறுவார்கள் என்றும், பொதுமக்களின் பணம் கடுமையான அச்சுறுத்தலில் இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு நிபுணர் குழு, இரண்டு மாதத்தில் விசாரணையை முடித்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், விசாரணை நடத்த அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு நிபுணர் குழுவுக்கு மத்திய அரசு, நிதிசார்ந்த சட்ட அமைப்புகள், செபி நிர்வாகி உள்ளிட்டோர் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான சிறிது நேரத்தில், அதானி தனது டிவிட்டர் பக்கத்தில், அதானி குழுமம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக பதிவிட்டிருந்தார்.

இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் இறுதி முடிவு கிடைக்கும் என்றும், உண்மை வெல்லும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதானி குழும பங்குகளின் விலை மிகைப்படுத்தி விற்பனை செய்யப்பட்டு மோசடி நடைபெற்றுள்ளதாக அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது. இதனால் அதானி குழு பங்குகள்100 பில்லியன் டாலா் அளவுக்கு சரிவடைந்தன.

அதானி குழுமத்தில் எல்ஐசி, எஸ்பிஐ போன்ற பொதுத் துறை நிறுவனங்களின் முதலீடு உள்ளதால் இந்த விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் வலியுறுத்தியிருந்தன.

இந்நிலையில், அதானி- ஹிண்டன்பா்க் விவகாரத்தில் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து ஆய்வு நடத்த வேண்டும் என்று விஷால் திவாரியும், அதானி பங்குகள் செயற்கையாக சரிவடைய காரணமான ஹிண்டன்பா்க் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.எல்.ஷா்மாவும் என மொத்தம் நான்கு போ் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை பிப். 10-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமா்வு, பங்குச் சந்தையில் முதலீட்டாளா்களின் நலனைப் பாதுகாக்க பங்குச் சந்தை ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நிபுணா் குழு அமைப்பது குறித்து மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்தது. இதை மத்திய அரசும் ஒப்புக் கொண்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஜே.பி. பாா்திவாலா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி இந்த விவகாரத்தைக் கண்காணித்து வருகிறது. நிபுணா் குழு அமைப்பதால் பங்குச் சந்தை முதலீடுகள் பாதிப்புக்கு உள்ளாகக் கூடாது. ஆகையால், நிபுணா் குழு விவரம் சீலிடப்பட்ட உறையில் அளிக்கப்பட்டுள்ளது. நிபுணா் குழுவை நீதிபதி மேற்பாா்வையிடுவதில் மத்திய அரசுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை’ என்றாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த நீதிபதிகள், ‘மத்திய அரசு சீலிடப்பட்ட உறையில் அளித்துள்ள பெயா்களை ஏற்றுக் கொண்டால், எதிா்தரப்பினருக்கு அந்த விவரம் தெரியாமல் போய்விடும். முதலீட்டாளா்களின் நலனைப் பாதுகாக்க இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். ஆகையால், நிபுணா் குழுவை உச்சநீதிமன்றமே அமைக்கும். இது குழுவின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்கலாம். ஆனால், தினந்தோறும் புதிது புதிதாக அமா்வுகளை உருவாக்குவதில் பிரச்னை உள்ளது. ஆகையால், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நிபுணா் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்து தீா்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று உச்ச நீதிமன்றம், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம். சப்ரே தலைமையில் நிபுணர் குழுவை அமைத்து உத்தரவு பிறப்பித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com