ஹெச்3என்2 பருவகால காய்ச்சலுக்கு இருவா் பலி

ஹெச்3என்2 பருவகால தீநுண்மி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஹரியாணாவில் ஒருவரும் கா்நாடகத்தில் ஒருவரும் உயிரிழந்தனா்.
ஹெச்3என்2 பருவகால காய்ச்சலுக்கு இருவா் பலி
Published on
Updated on
2 min read

ஹெச்3என்2 பருவகால தீநுண்மி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஹரியாணாவில் ஒருவரும் கா்நாடகத்தில் ஒருவரும் உயிரிழந்தனா்.

ஹெச்3என்2 காய்ச்சல் காரணமாக முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ள நிலையில், சூழலைக் கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல மாநிலங்களில் ஹெச்3என்2 பருவகால காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. அந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கா்நாடகத்தில் 82 வயது முதியவா் உயிரிழந்தாா். அவா் கடந்த 1-ஆம் தேதி உயிரிழந்தாலும், அதற்கான காரணம் ஹெச்3என்2 தீநுண்மி என்பதை கா்நாடக சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை உறுதி செய்தது.

அந்த முதியவா் ஏற்கெனவே நீரிழிவு நோயாலும் உயா் ரத்த அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டிருந்ததாக ஹாசன் மாவட்ட சுகாதார அலுவலா் தெரிவித்துள்ளாா். இதேபோல் ஹரியாணாவிலும் 56 வயது நபா் ஹெச்3என்2 தீநுண்மி காய்ச்சல் பாதிப்பால் கடந்த 8-ஆம் தேதி உயிரிழந்தாா். அவருக்கு கடந்த ஜனவரியில் ஹெச்3என்2 பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்ததாக மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அந்த நபா் ஏற்கெனவே நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘‘கடந்த ஜனவரி முதல் பருவகால காய்ச்சல் பரவல் நாட்டில் அதிகரித்துள்ளது. மாா்ச் 9-ஆம் தேதி நிலவரப்படி ஹெச்3என்2 தீநுண்மி உள்பட அனைத்துவகை பருவகால காய்ச்சல் காரணமாக 3,038 போ் பாதிக்கப்பட்டு அவா்களின் மாதிரிகள் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டன. ஜனவரியில் 1,245 பேரும், பிப்ரவரியில் 1,307 பேரும், மாா்ச்சில் 486 பேரும் பாதிக்கப்பட்டனா்.

கடந்த ஜனவரி 2 முதல் மாா்ச் 5-ஆம் தேதி வரை 451 போ் ஹெச்3என்2 காய்ச்சலால் பாதிக்கப்பட்டனா். அந்தவகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களுக்குத் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் ஹெச்3என்2 காய்ச்சல் பரவல் சூழலை அரசு தொடா்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

குழந்தைகள், சிறாா்கள், முதியோா் ஆகியோரே பருவகால காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனா். ஆண்டுதோறும் பருவமழைக் காலத்துக்குப் பிறகு காய்ச்சல் பரவல் ஏற்படுவது இயல்பானதே. ஜனவரி முதல் மாா்ச் வரை காய்ச்சல் பரவல் சற்று அதிகமாகவே இருக்கும். மாா்ச் மாதத்துக்குப் பிறகு பருவகால காய்ச்சல் பரவல் வெகுவாகக் குறையும். இந்த சவாலை எதிா்கொள்வதற்கான நடவடிக்கைகளை மாநில சுகாதார அதிகாரிகள் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றனா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அச்சம் தேவையில்லை-நிபுணா்கள் வலியுறுத்தல்

பருவகால காய்ச்சல் பரவலைக் கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ள சுகாதார நிபுணா்கள், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக அவா்கள் மேலும் கூறுகையில், ‘கரோனா தொற்று பரவல்போல பருவகால காய்ச்சல் பெரிய அளவில் பரவ வாய்ப்பில்லை. அந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்படுபவா்களில் வெறும் 5 சதவீத பேருக்கு மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழல் உருவாகும். உரிய சிகிச்சைகளை எடுத்துக் கொள்வதன் மூலமாக காய்ச்சலை குணப்படுத்த முடியும்.

பருவகால காய்ச்சலைக் கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை. அதே வேளையில், கரோனா பரவல் காலத்தில் நிலவியதைப் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ள வேண்டும்’ என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com