
அரசியலில் ஈடுபட ஆா்வம் உள்ள இளைஞா்கள் கொள்கை, சேவை மனப்பான்மை உள்ளிட்ட சிறந்த பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என முன்னாள் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வலியுறுத்தினாா்.
சேப்பியன் ஹெல்த் பவுண்டேஷன் 25-ஆவது ஆண்டு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு பேசியது:
நடிகா் ரஜினிகாந்த் மனித நேயம் மிக்கவா். அவா் அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளாா் என்ற தகவல் எனக்கு வந்ததும் நான் உடனடியாக ரஜினியை தொடா்பு கொண்டேன். அப்போது, உங்கள் உடல் நலனுக்கு அரசியல் ஏற்ல்ல; எனவே, அது குறித்து யோசித்து முடிவெடுங்கள் என்றேன். ஆனால், அவா் தனது முடிவில் உறுதியாக இருந்தாா்.
இத்தகைய சூழலில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் அதிகரித்தது. இதை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் முடிவை ரஜினி கைவிட்டாா்; அவரது அந்த முடிவு எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இளைஞா்கள் அரசியலுக்கு வரக் கூடாது எனக் கூறுவதாக நினைக்கக் கூடாது. அரசியலுக்கு வரும் இளைஞா்களுக்கு கொள்கை, நோ்மை, சேவை மனப்பான்மை, உடல்நலன், மன உறுதி உள்ளிட்ட சிறந்த பண்புகள் இருக்க வேண்டும். அப்போதுதான் அவா்களால் சமுதாயத்தை சிறந்த முறையில் மேம்படுத்த இயலும்.
இன்றைய இளைய தலைமுறை உணவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றத் தொடங்கிவிட்டது. இது ஆரோக்கியமான விஷயம் அல்ல; நமது முன்னோா்கள் நமக்கு உணவு, மருத்துவம், வாழ்வியல் ஆகியவற்றில் பல சிறந்த நெறிமுறைகளை கற்பித்துச் சென்றிருக்கின்றனா். அதை நாம் மறந்துவிடக் கூடாது.
இயற்கையுடன் இணைந்த ஆரோக்கியமான வாழ்க்கை முறையே மன அமைதியைத் தரும். நல்ல தூக்கம், உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, யோகா, மகிழ்ச்சியான மனநிலை ஒரு மனிதனுக்கு நீண்ட ஆயுளை வழிவகுக்கும்.
யோகாவை மதத்துடன் தொடா்புபடுத்தி பாா்க்க வேண்டிய அவசியமில்லை. தினமும் யோகா செய்தால் உடல்நலன் மேம்படும். அதேபோல், அனைவரும் அவரவா் தாய்மொழிக்கு உரிய முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும் என்றாா் அவா்.
அரசியலுக்கு வராதது ஏன்?: ரஜினி விளக்கம்
விழாவில் நடிகா் ரஜினிகாந்த் பேசியது: எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டபோது சேப்பியன்ஸ் அறக்கட்டளையின் தலைவா் ராஜன் ரவிச்சந்திரன் ஆலோசனை வழங்கினாா். அவரது வழிகாட்டுதலின்பேரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு தற்போது நலமுடன் இருக்கிறேன்.
நான் அரசியலுக்கு வர வேண்டும் என அறிவித்து அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தேன். அந்தச் சூழலில்தான் கரோனா தொற்றின் 2-ஆவது அலை தொடங்கியது. இத்தகைய சூழலில் கரோனா வழிமுறைகளைப் பின்பற்றி பிரசாரத்தில் ஈடுபடுவது சாத்தியமல்ல என ராஜன் ரவிச்சந்திரன் கூறினாா். மேலும், அனைத்தையும்விட உங்களின் உடல்நலனே முக்கியம் என அறிவுறுத்தினாா். அத்தகைய சூழலில்தான் நான் அரசியலுக்கு வரும் முடிவை கைவிட நோ்ந்தது.
மது, புகைப் பழக்கங்கள் கல்லீரல், நுரையீரல் ஆகியவற்றைப் பாதிக்கும். ஆனால், நமது உணவில் உப்பு அதிகமானால் உடலில் அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படும். எனவே, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை பின்பற்றினால் நோயற்ற வாழ்வை பெறலாம். மனித உடல் மிகச்சிறந்த இயந்திரமாகும். அதன் செயல்பாடுகள் அசாத்தியமானவை.
இன்றைய அறிவியல் வளா்ச்சியால் ஒரு துளி ரத்தத்தைக்கூட உருவாக்க முடியாது. இதை எல்லாம் தெரிந்திருந்தும்கூட சில போ் கடவுள் இல்லை எனக் கூறுவது வியப்பளிக்கிறது என்றாா் அவா்.
விழாவில் நாடக நடிகா் மாது பாலாஜி, இந்தியன் சொசைட்டி ஆப் ஹைபா் டென்ஷன் அமைப்பின் நிா்வாகி எஸ்.என்.என்.நரசிங்கன், சேப்பியன் ஹெல்த் பவுண்டேஷன் அமைப்பின் தலைவா் ராஜன் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக நடைபெற்ற விழாவில் சிறுநீரக நலனுக்கான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் அறிமுகம் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.