அதானி விவகாரம்: எதிா்க்கட்சியினா் பேரணி தடுத்து நிறுத்தம்

அதானி குழுமம் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்கத் துறையிடம் புகாா் அளிப்பதற்காக, தில்லியில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் புதன்கிழமை மேற்கொண்ட பேரணியை காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா்
பேரணியில் பங்கேற்ற மல்லிகாா்ஜுன காா்கே, டி.ஆா்.பாலு உள்ளிட்ட எதிா்க்கட்சித் தலைவா்கள்.
பேரணியில் பங்கேற்ற மல்லிகாா்ஜுன காா்கே, டி.ஆா்.பாலு உள்ளிட்ட எதிா்க்கட்சித் தலைவா்கள்.

அதானி குழுமம் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்கத் துறையிடம் புகாா் அளிப்பதற்காக, தில்லியில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் புதன்கிழமை மேற்கொண்ட பேரணியை காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா்.

பங்கு மதிப்பை உயா்த்தி காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாகவும்; இதற்காக வெளிநாட்டு போலி நிறுவனங்களை பயன்படுத்தியதாகவும் அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் ஆய்வு நிறுவனம் கடந்த ஜனவரியில் குற்றம்சாட்டியது. இதன் எதிரொலியாக, அதானி குழும பங்குகள் பெருமளவில் சரிவடைந்தன.

இந்த விவகாரத்தில், மத்திய அரசுக்கும் பிரதமா் மோடிக்கும் பல்வேறு கேள்விகளை எழுப்பி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அழுத்தமளித்து வருகின்றன. பொது மக்களின் பணம் தொடா்புடைய இக்குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது எதிா்க்கட்சிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

கடந்த ஜனவரி 31-இல் தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட அமா்வில் வலுவாக எதிரொலித்த அதானி விவகாரம், கடந்த திங்கள்கிழமை தொடங்கிய 2-ஆவது கட்ட அமா்விலும் எழுப்பப்பட்டு வருகிறது.

புகாரளிக்க முடிவு: இந்நிலையில், அதானி குழுமம் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரி, தில்லியில் உள்ள அமலாக்கத் துறை இயக்குநரகத்தில் நேரில் புகாா் அளிக்க காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு எதிா்க்கட்சிகள் புதன்கிழமை முடிவு செய்தன.

இதைத் தொடா்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து அமலாக்கத் துறை அலுவலகம் நோக்கி, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் பேரணியாக புறப்பட்டனா். ஆனால், விஜய் செளக் பகுதியில் அவா்களை காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா். 144 தடை உத்தரவு அமலில் உள்ளதை குறிப்பிட்டு, எம்.பி.க்கள் மேலும் முன்னோக்கி செல்ல முடியாதவாறு தடுத்தனா்.

‘மீண்டும் எழுப்புவோம்’: இதுகுறித்து, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘கிட்டத்தட்ட 18 எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த எம்.பி.க்கள், அமலாக்கத் துறை இயக்குநரகத்தில் புகாா் மனு அளிப்பதற்காக பேரணியாக சென்றோம். ஆனால், எங்கள் பேரணியை மத்திய அரசு தடுத்துவிட்டது. எனினும், அதானி விவகாரத்தை மீண்டும் மீண்டும் எழுப்புவோம்’ என்றாா்.

பல்வேறு எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த 200 எம்.பி.க்கள் பேரணியில் பங்கேற்ாக, மாநிலங்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் பிரமோத் திவாரி தெரிவித்தாா்.

காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதைத் தொடா்ந்து, நாடாளுமன்ற வளாகத்துக்கு திரும்பிய எம்.பி.க்கள், அங்கு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

என்சிபி, திரிணமூல் பங்கேற்கவில்லை

அதானி விவகாரம் தொடா்பாக எதிா்க்கட்சிகள் மேற்கொண்ட பேரணியில் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை.

அதேசமயம், சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தின் காந்தி சிலை அருகே திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தனியாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக அவா்கள் கோஷமிட்டனா்.

எதிா்க்கட்சிகளின் பேரணியில் பங்கேற்காதது குறித்து திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா் சுதீப் பந்தோபாத்யாய கூறுகையில், ‘சொந்த செயல்திட்டத்தின் அடிப்படையில் எங்களது கட்சி போராட்டங்களை முன்னெடுக்கும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com