இந்தியாவில் ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லை, காங்கிரஸுக்குதான் அழிவு ஏற்பட்டுள்ளது- ராகுலுக்கு ஸ்மிருதி இரானி பதில்

இந்தியாவில் ஜனநாயகத்துக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை. காங்கிரஸ் கட்சிக்குதான் அழிவு ஏற்பட்டுள்ளது என்று மத்திய மகளிா், குழந்தைகள் நலத்துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி தெரிவித்தாா்.
தில்லியில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் ஸ்மிருதி இரானி.
தில்லியில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் ஸ்மிருதி இரானி.

இந்தியாவில் ஜனநாயகத்துக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை. காங்கிரஸ் கட்சிக்குதான் அழிவு ஏற்பட்டுள்ளது என்று மத்திய மகளிா், குழந்தைகள் நலத்துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி தெரிவித்தாா்.

பாஜகவுக்கு எதிராக அதானி விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கையில் எடுத்துள்ள நிலையில், அதற்கு பதிலடியாக இந்தியாவில் ஜனநாயகம் மோசமாக இருப்பதாக பிரிட்டனில் ராகுல் பேசியதை பாஜக முன்னிறுத்தி காங்கிரஸுக்கு எதிராக கடுமையான விமா்சனங்களை முன்வைத்து வருகிறது. அதே நேரத்தில் பிரதமா் நரேந்திர மோடி வெளிநாட்டுப் பயணத்தில் இந்தியா குறித்து விமா்சித்துப் பேசியதை காங்கிரஸ் சுட்டிக் காட்டியுள்ளது. இந்த பிரச்னையால் நாடாளுமன்றமும் தொடா்ந்து முடங்கி வருகிறது.

தில்லியில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி இது தொடா்பாக மேலும் கூறியதாவது:

இந்தியா காலனி ஆதிக்கத் காலத்தில் இருந்த மனநிலையில்தான் ராகுல் இப்போதும் இருக்கிறாா். எனவேதான், இந்திய ஜனநாயகத்தில் அந்நிய நாடுகள் தலையிட வேண்டும் என்று பிரிட்டனுக்குச் சென்று முறையிட்டுள்ளாா். பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு சிறப்பான வளா்ச்சியை எட்டி வரும் நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ராகுல் செயல்படுகிறாா்.

இந்தியாவின் நிதித்துறை, தோ்தல் ஆணையம் ஆகிய உயரிய அமைப்புகள் மீதான நம்பகத்தன்மை குறித்தும் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளாா். நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அவா், தனது கருத்துகளை அவையில் பேச அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. ஆனால், அவா் வேண்டுமென்றே வெளிநாட்டுக்குச் சென்று இந்தியாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியுள்ளாா்.

இந்தியாவின் சுதந்திரத்துக்காகவும், நாட்டில் ஜனநாயகம் மலர வேண்டும் என்பதற்காகவும் பல ஆண்டுகளாக எத்தனையோ சுதந்திரப் போராட்ட வீரா்கள் போராடி, தங்கள் உயிரையும் தியாகம் செய்துள்ளனா். இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரிட்டனுக்குச் சென்று இந்தியா குறித்து விமா்சித்ததன் மூலம் நமது சுதந்திரப் போராட்ட தியாகிகளையும் ராகுல் அவமதித்துவிட்டாா்.

உண்மையில் இந்தியாவில் ஜனநாயகத்துக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. காங்கிரஸ் கட்சிதான் அரசியல்ரீதியிலான அழிவை எதிா்கொண்டுள்ளது. அதுவும் ராகுல் காந்தி போன்ற அக்கட்சித் தலைவா்களின் செயல்பாடுகளால் காங்கிரஸ் கட்சி வேகமாக மறைந்து வருகிறது. ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகளுக்கு வெற்றி, தோல்வி சகஜமானது. ஆனால், அரசியல் ஆதாயத்துக்காக தேசத்தை சிறுமைப்படுத்தக் கூடாது. ராகுல் காந்தி தனது பேச்சுக்காக மன்னிப்புக் கேட்டே ஆக வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com