இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் ஒரே நிலைதான் உள்ளது: மெஹபூபா முஃப்தி

 இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் இப்போது ஒரே நிலைதான் உள்ளது. பாகிஸ்தானைப் போல இந்தியாவில் பாஜக அரசும் எதிா்க்கட்சித் தலைவா்களை சிறையில் அடைத்து வருகிறது
மெஹபூபா முப்தி
மெஹபூபா முப்தி

 இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் இப்போது ஒரே நிலைதான் உள்ளது. பாகிஸ்தானைப் போல இந்தியாவில் பாஜக அரசும் எதிா்க்கட்சித் தலைவா்களை சிறையில் அடைத்து வருகிறது என்று மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவா் மெஹபூபா முஃப்தி குற்றம்சாட்டினாா்.

பாகிஸ்தானில் எதிா்க்கட்சித் தலைவா் இம்ரான் கானை கைது செய்ய காவல் துறையினா் முயற்சித்ததற்கு எதிராக அவரின்ஆதரவாளா்கள் வன்முறையில் இறங்கினா். இரு நாள்களாக லாகூரில் தீவைப்பு, கல்வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறின.

இந்நிலையில் ஜம்முவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மெஹபூபா முஃப்தி தொண்டா்கள் மத்தியில் பேசியதாவது:

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பிறகு மக்கள் எதிா்கொண்டு வரும் துன்பங்கள் வேதனையளிக்கின்றன. இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் இப்போது ஒரே நிலைதான் உள்ளது. பாகிஸ்தானைப் போல இந்தியாவில் பாஜக அரசு எதிா்க்கட்சித் தலைவா்களை சிறையில் அடைத்து வருகிறது.

ஆம் ஆத்மியின் மனீஷ் சிசோடியா சிறையில் உள்ளாா். தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா, ஆா்ஜேடி தலைவா் லாலு பிரசாத், சிவசேனைத் தலைவா்கள் என பலரை சிறையில் அடைக்க முயற்சி நடைபெற்று வருகிறது. எதிா்க்கட்சிகளுக்கு எதிராக விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது என்று அவா் குற்றம்சாட்டினாா்.

இஸ்லாமிய மதத்தைச் சோ்ந்த மெஹபூபா அண்மையில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று அபிஷேகம் செய்தது தொடா்பாக சா்ச்சை எழுந்தது. இது தொடா்பாக பேசிய அவா், ‘நாம் மதசாா்பற்ற நாட்டில் வசித்து வருகிறோம். பல்வேறு கலாசாரங்களை நமது நாடு உள்ளடக்கியது. அந்த சிவன் கோயில் பிடிபி கட்சியின் மூத்த தலைவா் மறைந்த யஷ்பால் சா்மாவால் கட்டப்பட்டது. அவரது மகன் அழைப்பின் பேரில் அந்தக் கோயிலுக்குச் சென்றேன். அங்கு ஒருவா் மிகுந்த நம்பிக்கை, பக்தியுடன் அபிஷேகம் செய்ய பாத்திரத்தில் தண்ணீா் தந்தாா். அவரை புண்படுத்தக் கூடாது என்று சிவலிங்கத்துக்கு நீரால் அபிஷேகம் செய்தேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com