வினாத்தாள் கசிவு: தேர்வை ரத்து செய்து தெலங்கானா அரசுப் பணியாளர் தேர்வாணையம் உத்தரவு

தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக மார்ச் 5 ஆம் தேதி நடத்தப்பட்ட  "இளநிலை பொறியாளர்" தேர்வை ரத்து செய்து தெலங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎஸ்பிஎஸ்சி) உத்தரவிட்டுள்ளது.
வினாத்தாள் கசிவு: தேர்வை ரத்து செய்து தெலங்கானா அரசுப் பணியாளர் தேர்வாணையம் உத்தரவு

ஹைதராபாத் (தெலுங்கானா): தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக மார்ச் 5 ஆம் தேதி நடத்தப்பட்ட  "இளநிலை பொறியாளர்" தேர்வை ரத்து செய்து தெலங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎஸ்பிஎஸ்சி) உத்தரவிட்டுள்ளது. மறுத்தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என டிஎஸ்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

தெலங்கானா அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் மார்ச் 5 ஆம் தேதி "இளநிலை பொறியாளர்" பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வின் வினாத்தாள் வெளியாகியிருப்பதாக தேர்வர்கள் தெரிவித்தனர். 

இதன் காரணமாக தேர்வு எழுதுவதற்காக கடினமாக படித்து வந்திருந்த ஆயிரக்கணக்கனோர் பாதிப்புக்குள்ளாகினர்.  

இந்த சம்பவம் தொடர்பாக தேர்வாணையம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தது. 

இந்த நிலையில் இளநிலை பொறியாளர் பணிக்கான தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கானது சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தேர்வுத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக அவர்கள் விசாரணை மேற்கொள்வார்கள். குற்றப்பிரிவு மற்றும் ஹைதராபாத் நகர சிறப்பு புலனாய்வுக் குழுவின் கூடுதல் காவல் ஆணையர் நேரடி கண்காணிப்பின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், "தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக, ஹைதராபாத் மாவட்ட மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ஆய்வு செய்த தேர்வாணையம், மார்ச் 5 ஆம் அன்று நடைபெற்ற "இளநிலை பொறியாளர்" பணிக்கான தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தேர்வு நடத்துவதற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது. 

தெலங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎஸ்பிஎஸ்சி) பொதுத் தேர்வுத் தாள் கசிவு வழக்கில் 9 பேரை ஹைதராபாத் போலீஸார் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். 

முன்னதாக, செவ்வாய்கிழமை தெலங்கானா அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎஸ்பிஎஸ்சி) தேர்வுத் தாள் கசிந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் முன்பு மாணவர் தலைவர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து உஸ்மானியா பல்கலை கழகத்தின் மாணவர் கூட்டு நடவடிக்கை குழுவின் மாநிலத் தலைவர் கொத்தப்பள்ளி திருப்பதி செய்தியாளர்களிடம் பேசுகையில்,  தேர்வு நடைபெறுவதற்கு முன்னரே "இளநிலை பொறியாளர் மற்றும் நகர திட்டமிடல் சார்ந்த தேர்வு வினாத்தாள்" கசிந்துள்ளது. இந்த தேர்வுக்காக பல மாணவர்கள், உஸ்மானியா பல்கலையில் பல ஆண்டுகளாக கடினமாக படித்து வந்தனர்.

"அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏழை மாணவர்கள் பலர் கிராமங்களில் இருந்து வந்து எஸ்.ஐ., கான்ஸ்டபிள் பயிற்சி, குரூப் 1, குரூப் 2 என பல தேர்வுகளுக்காக கடுமையாகப் படித்து வருகின்றனர். ஆனால், சில பணக்காரர்கள் ரூ.5 முதல் 10 லட்சம் கொடுத்து அரசு வேலையை சுலபமாக பெற்றுச் செல்கின்றனர். 

இந்த நிலையில் "இளநிலை பொறியாளர் மற்றும் நகர திட்டமிடல் சார்ந்த தேர்வு வினாத்தாள்கள்" கசிந்துள்ளதற்கு பொறுப்பேற்று தெலங்கானா அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் ஜனார்த்தன் ரெட்டி உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட பிரவீன் உள்பட அனைவரையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். 

மேலும், தேர்வுக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு தேர்வுகளை மீண்டும் நடத்த வேண்டும். தேர்வுத்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் உயரதிகாரிகளாக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர்  கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com