ஸ்ரீநகர்: ஆசியாவின் மிகப்பெரிய துலீப் தோட்டம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பார்வையாளர்களுக்காக நாளை திறக்கப்பட உள்ளது.
ஸ்ரீநகரில் அமைந்திருக்கும் மிகப்பெரிய துலீப் தோட்டத்தில், பல வகையான, வண்ண வண்ண நிறங்களில், ஆளை மயக்கும் வாசனையுடன் சுமார் 16 லட்சம் துலீப் மலர்கள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருக்கின்றன.
ஸ்ரீநகரில், ஸபர்வான் பகுதியில், உலகின் மிகப் புகழ்பெற்ற தால் ஏரியின் கரையோரம் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் இந்த துலீப் தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தோட்டத்தின் பொறுப்பாளர் இனாம்-உல்-ரெஹ்மான் கூறுகையில், துலீப் மலர்கள் தற்போது மலரத் தொடங்கியிருக்கிறது, பார்வையாளர்களை சொக்கவைக்கும் அழகில் பூத்துக் குலங்கிக்கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
68 வகையான சுமார் 16 லட்சம் துலீப் மலர்கள் இங்கு மலர்ந்துள்ளன. தற்போது புதிதாக நான்கு புதிய வகைகளும் இதில் சேர்ந்துள்ளன. இங்கு பார்வையாளர்கள் கண்குளிர மலர்களைப் பார்ப்பதோடு, அழகான மலர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ள உகந்த இடமாக மாறியிருக்கிறது.
மலர்ப் போர்வை போர்த்தியது போல இந்த தோட்டத்தை உருவாக்க சுமார் நூறுக்கும் மேற்பட்ட தோட்டக்கலைஞர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த தோட்டத்தில் முன்கூட்டியே, மத்தியப் பகுதியில் மற்றும் காலம் தாழ்த்தி மலரும் வகைகள் என பகுதி பகுதியாக நடவு செய்யப்பட்டுள்ளதால், இந்த மாதம் முழுக்க மலர்கள் மலர்ந்து சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு 3.60 லட்சம் சுற்றுலாப் பயணிகள் துலீப் தோட்டத்தைப் பார்வையிட வருகைதந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.