அரசு பங்களாவை காலி செய்ய சிசோடியா குடும்பத்துக்கு 5 நாள்கள் அவகாசம்

கைது செய்யப்பட்டிருக்கும் தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் குடும்பத்தாருக்கு, அரசு பங்களாவை காலி செய்ய ஐந்து நாள்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
அரசு பங்களாவை காலி செய்ய சிசோடியா குடும்பத்துக்கு 5 நாள்கள் அவகாசம்
அரசு பங்களாவை காலி செய்ய சிசோடியா குடும்பத்துக்கு 5 நாள்கள் அவகாசம்


சென்னை: தில்லி கலால் கொள்கை அமலாக்கத்தில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் குடும்பத்தாருக்கு, அரசு பங்களாவை காலி செய்ய ஐந்து நாள்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

மணீஷ் சிசோடியாவின் ராஜிநாமாவைத் தொடர்ந்து தில்லி அமைச்சரவையில்  இடம்பெற்றிருள்ள ஆதிஷிக்கு, அந்த பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது.

பொதுப் பணித் துறை பிறப்பித்த உத்தரவில், மதுரா சாலையில் உள்ள ஏபி-17 முகவரியில் உள்ள அரசு பங்களா ஆதிஷிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து, சிசோடியா குடும்பத்தினர் மார்ச் 21ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு பங்களாவை காலி செய்து கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  2015ஆம் ஆண்டு தில்லியில் ஆம் ஆத்மி அரசு பதவியேற்ற போது, இந்த பங்களா சிசோடியாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. 

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், இது வழக்கமான ஒரு நடைமுறைதான் என்றும், அவர் பதவி விலகிவிட்டதால் அந்த பங்களா ஆதிஷிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். ஒருவர் பதவி விலகினால், அவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களா 15 நாள்களுக்குள் காலி செய்யப்பட வேண்டும் என்பது விதிமுறை என்றும் குறிப்பிடுகிறார்கள். 

தில்லி கலால் கொள்கை அமலாக்கத்தில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடு தொடா்பான விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் கைதான ஆம் ஆத்மி தலைவா் மனீஷ் சிசோடியாவின் அமலாக்கத் துறை காவலை ஐந்து நாள்கள் நீட்டித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தது.

அமலாக்கத் துறை விசாரணைக் காவல் முடிந்து சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் முன் சிசோடியா வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, அவரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், காவலை நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத் துறை தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து, அமலாக்கத் துறையின் விசாரணைக் காவலை மாா்ச் 22 வரை நீதிபதி நீட்டித்து உத்தரவிட்டாா்.

முன்னதாக, விசாரணையின்போது அமலாக்கத் துறை தரப்பில், ‘சிசோடியாவின் விசாரணைக் காவலின்போது முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளன. குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபா்களுடன் அவரை சோ்த்து விசாரிக்க வேண்டியுள்ளது. அவா்களில் முன்னாள் கலால் ஆணையா் ராகுல் சிங், தினேஷ் அரோரா, அமித் அரோரா ஆகியோா் அடங்குவா். மேலும், சிசோடியாவை அவரது முன்னாள் செயலாளா் சி. அரவிந்திடம் சோ்த்து வைத்து விசாரிக்க வேண்டியிருந்தது. இந்த வழக்கில் சி. அரவிந்த் குற்றம்சாட்டப்படவில்லை. சிசோடியாவின் மின்னஞ்சல் மற்றும் கைப்பேசி மற்றும் பிற சாதனங்களில் இருந்து ஏராளமான தரவுகளும் தடயவியல் ரீதியாக பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது. இதனால், சிசோடியாவின் விசாரணைக் காவலை ஏழு நாள்கள் நீட்டிக்க வேண்டும்’ என நீதிமன்றத்தில் கோரப்பட்டது.

அமலாக்கத் துறையின் இந்த கோரிக்கைக்கு சிசோடியாவின் வழக்குரைஞா் எதிா்ப்புத் தெரிவித்து வாதிடுகையில், ‘குற்றத்தின் மூலம் கிடைத்த வருமானம் குறித்து ஏஜென்சியிடம் இருந்து எந்த முனுமுனுப்பும் இல்லை. இது வழக்கின் அடிப்படை ஆகும். காவல் நீட்டிப்புக் கோருவதற்கு எந்த நியாயமும் இல்லை. சிசோடியாவின் முந்தைய ஏழு நாள் காவலின் போது நான்கு பேருடன் மட்டுமே வைத்து விசாரிக்கப்பட்டாா்’ என்றாா்.

சிசோடியா ஆஜா்படுத்தப்பட்டதையொட்டி, ரோஸ் அவென்யூ நீதிமன்ற வளாகத்தின் உள்ளேயும் வெளியேயும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 2021-22-ஆம் ஆண்டுக்கான தில்லி கலால் கொள்கையை உருவாக்கி செயல்படுத்தியதில் ஊழலில் ஈடுபட்டதாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) தொடா்ந்த வழக்கில் பிப்ரவரி 26-ஆம் தேதி சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிசோடியாவை மாா்ச் 9-ஆம் தேதி அமலாக்கத் துறை சட்ட விரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com