குஜராத்தில் 5 ஆண்டுகளில் 41,621 பெண்கள் மாயம்: என்சிஆர்பி அதிர்ச்சி தகவல்

குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயுள்ளனர் என தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 
குஜராத்தில் 5 ஆண்டுகளில் 41,621 பெண்கள் மாயம்: என்சிஆர்பி அதிர்ச்சி தகவல்


காந்திநகர்:  கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறி ஐஎஸ் அமைப்பில் இணைந்ததாக தி கேரளா ஸ்டோரி படத்தில் வெளியான தகவலுக்கு ஆதாரம் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயுள்ளனர் என தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஏற்படுத்திய சர்ச்சை இன்று வரை குறையாமல் தொடர்கிறது. 32,000 பெண்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறி ஐஎஸ் அமைப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படாத நிலையில் ஆதாரமற்ற தகவல்களை வைத்து இயக்குநர் படத்தை இயக்கியுள்ளதாக ஊடகங்கள் விமர்சித்துள்ளன.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 2016 முதல் 2020 வரை 5 ஆண்டுகளில் 41,621 பெண்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 

தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்சிஆர்பி) தரவுகளின்படி, 2016 ஆல் 7,105 பெண்களும், 2017 இல் 7,712 பெண்களும், 2018 இல் 9,246 பெண்களும், 2019 இல் 9,268 பெண்களும். 2020 இல் 8,290 பெண்கள் என மொத்தம் 41,621 பெண்கள் காணாமல் போயுள்ளனர்.

இதில், குறிப்பாக குஜராத் மாநிலத்தின் முக்கிய நகரங்களான அகமதாபாத் மற்றும் வதோதராவில் 2021 இல் 4,722 பெண்கள் காணாமல் போயுள்ளனர். இந்த தகவல் குஜராத் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், குஜராத் மாநில  மனித உரிமைகள் ஆணைய உறுப்பினருமான கதிர் சின்ஹா கூறுகையில், காணாமல் போனவர்கள் குறித்த வழக்குகளில், சிறுமிகள் மற்றும் பெண்கள் குஜராத்தைத் தவிர பிற மாநிலங்களுக்கு வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலுக்கு அனுப்பப்படுகின்றனர்.

ஆனால், மாநில போலீசார் இதனை கண்டுகொள்ளவில்லை. காணாமல் போனோர் தொடர்பான புகார்களுக்கு காவல்துறை முன்னுரிமை கொடுப்பதில்லை. இதுபோன்ற வழக்குகள் கொலையை விட தீவிரமானது. காணாமல் போனவர்களின் வழக்குகளை ஒரு கொலை வழக்கைப் போன்று கடுமையாக விசாரிக்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையர் கதிர் சின்ஹா தெரிவித்துள்ளார்.

முன்னாள் கூடுதல் காவல்துறை இயக்குநர் டாக்டர் ராஜன் பிரயதர்ஷி கூறுகையில், "நான் கெத்தா மாவட்டத்தில் மாவட்ட காவல்துறை தலைவராக இருந்தபோது, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் ஏழைப் பெண்ணைக் கடத்திச் சென்று தனது மாநிலத்தில் கொத்தடிமையாக விற்றார்". ஏழைப் பெண்கள் காணாமல் போனதற்கு மனித கடத்தல் தான் காரணம், சட்டவிரோதமாக கடத்திச்சென்று வேறு மாநிலங்களுக்கு விற்கப்படுவதாக கூறினார்.

“மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். ஆனால், கேரளாவில் பெண்கள் காணாமல் போனது குறித்து பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பரபரப்பாக பேசி வருகின்றனர் என்று குஜராத் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஹிரேன் பங்கர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com