ஆகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 41,621 பெண்கள் காணாமல் போனதாக நேற்று செய்தி வெளியிடப்பட்ட நிலையில், மாநில அரசு சார்பில் குஜராத் காவல்துறையினர் சமூக வலைத்தளம் வாயிலாக பதிலளித்துள்ளனர்.
காணாமல் போன 41,621 பெண்களில் இதுவரை 39,497 பேர் திரும்ப கிடைத்துவிட்டனர் என்றும், மற்ற 2,124 பேரை காவல்துறையினரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை என்றும், காணாமல் போனதாக செய்திகளில் வெளியிட்ட பெண்களின் வழக்குகளை குஜராத் காவல்துறை மறுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், கடந்த 2021, 22ஆம் ஆண்டுகளின் தரவுகளையும் மாநில அரசு வெளியிடவில்லை. அது தொடர்பாக மேலும் சில விளக்கங்கள் தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து குஜராத் காவல்துறை டிவிட்டரில் குறிப்பிட்டிருப்பதாவது, 2016 - 2020ஆம் ஆண்டு வரை குஜராத்தில் 41,621 பெண்கள் காணாமல் போனதாக இந்திய குற்றப்பதிவு காப்பகம் வெளியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், 39,497 பேர் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களது குடும்பத்துடன் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் பெண்கள் வீட்டை விட்டு வெளியேற, குடும்பத் தகராறு, காதல், தேர்வில் தோல்வி போன்றவையே காரணங்களாக இருப்பதகாவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேசிய குற்றப் பதிவு காப்பகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின் அடிப்படையில், குஜராத் மாநிலத்தில் 2016ஆம் ஆண்டில் 7,105 பெண்களும், 2017ல் 7,712 பேரும், 2018ல் 9,246 பெண்களும், 2019ல் 9,268 பெண்களும் காணாமல் போயிருக்கிறார்கள் என்கிறது தகவல்கள். 2020லும் இது 8,290 ஆக இருந்துள்ளது.
இதன் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரமாக ஆக உள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு பேரவையில் அரசு சார்பில் அளித்த விளக்கம் ஒன்றில், கடந்த (2019 - 20) ஓராண்டில் மட்டும் அகமதாபாத், வதோதரா பகுதிகளிலிருந்து 4,722 பெண்கள் காணாமல் போயிருப்பதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.