சிபிஐ இயக்குநராக பதவியேற்றார் மூத்த ஐபிஎஸ் அதிகாரி பிரவீண் சூட்

சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநராக, மூத்த ஐபிஎஸ் அதிகாரி பிரவீண் சூட்   இன்று பதவியேற்றுக் கொண்டார்.  
சிபிஐ இயக்குநராக பதவியேற்றார் மூத்த ஐபிஎஸ் அதிகாரி பிரவீண் சூட்

சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநராக, கா்நாடக மாநில முன்னாள் காவல் துறைத் தலைவர் (டிஜிபி), மூத்த ஐபிஎஸ் அதிகாரி பிரவீண் சூட்   இன்று பதவியேற்றுக் கொண்டார்.  இரண்டு ஆண்டுகள் அவர் இந்தப் பதவியை வகிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று கர்நாடக மாநில முன்னாள் காவல்துறைத் தலைவர் (டிஜிபி) பொறுப்பை அவர் மாநில தலைமைச் செயலகத்தில் ஒப்படைத்திருந்தார்.

சிபிஐ இயக்குநராக ஐபிஎஸ் அதிகாரி பிரவீண் சூட் நியமிக்கப்படுவதாக மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறை சில நாள்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.

சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநராக பதவியேற்றுள்ள பிரவீண் சூட் (59), 1986-ஆம் ஆண்டு கா்நாடக பிரிவு ஐபிஎஸ் அதிகாரி. சிபிஐ இயக்குநராக இருந்த சுபோத் குமாா் ஜெய்ஸ்வாலின் 2 ஆண்டு பதவிக் காலம் இன்று  நிறைவடைந்ததையடுத்து, புதிய இயக்குநராக பிரவீண் சூட் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

முன்னதாக, புதிய இயக்குநரை தோ்வு செய்வது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி ஆகியோா் கொண்ட உயா்நிலைக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில், 3 ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயா்கள் தோ்வு செய்யப்பட்டு, நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 

அதைத் தொடா்ந்து, சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநராக பிரவீண் சூட் நியமனம் செய்யப்பட்டார்.

கா்நாடக மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக தோல்வியைச் சந்தித்து ஆட்சியை இழந்துள்ள சூழலில், அந்த மாநில காவல் துறைத் தலைவா் சிபிஐ இயக்குநராக பதவியேற்றுக்கொண்டுள்ளார். அத்துடன், வரும் 2024-ஆம் ஆண்டு பணி ஓய்வு பெறவுள்ள நிலையில், சிபிஐ இயக்குநராக இவா் பதவியேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

1986-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான பிரவீண்சூட், ஹிமாசல பிரதேசத்தை சோ்ந்தவா். ஐஐடி தில்லி, ஐஐஎம் பெங்களூரில் படித்தவா். 1986 ஆம் ஆண்டு முதல் கா்நாடக காவல் துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளாா். தற்கால குற்றச் செயல்களைக் கண்டறிய தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்த ஊக்கப்படுத்தி வந்தவா். சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்க புதிய அணுகுமுறைகளைக் கையாண்டுள்ளாா்.

2020, பிப்.1-ஆம் தேதி கா்நாடக டிஜிபியாக நியமிக்கப்பட்ட இவா், கரோனா காலத்தில் நிலைமையைத் திறம்பட கையாண்டவா். 2024-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதியுடன் அவரது பதவிக் காலம் நிறைவடைய இருந்தது. இந்நிலையில், சிபிஐ இயக்குநராக பிரவீண்சூட் பதவியேற்றுள்ளார்.

கா்நாடகத்தைச் சோ்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள் சிபிஐ இயக்குநராக பதவியேற்றிருப்பது இது 3-ஆவது முறையாகும். இதற்கு முன்பு 1996 ஜூலை 31 முதல் 1997 ஜூன் 30 வரை ஜோகிந்தா் சிங், 1998 ஜன. 31 முதல் 1998 மாா்ச் 31 வரை காா்த்திகேயன் ஆகியோா் சிபிஐ இயக்குநா்களாக பணியாற்றியுள்ளனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com