உலகின் மிக விலை உயர்ந்த மாம்பழத்தின் மதிப்பு ஜஸ்ட்..

உலகின் மிக விலை உயர்ந்த மாம்பழமாகக் கருதப்படுவது மியாஸகி மாம்பழங்கள். இந்த வகை மாம்பழங்களை ஒரு கிலோ வாங்க வேண்டும் என்றால் நாம் லட்சாதிபதியாக இருக்க வேண்டும்.
உலகின் மிக விலை உயர்ந்த மாம்பழத்தின் மதிப்பு ஜஸ்ட்..


கோபால்: உலகின் மிக விலை உயர்ந்த மாம்பழமாகக் கருதப்படுவது மியாஸகி மாம்பழங்கள். இந்த வகை மாம்பழங்களை ஒரு கிலோ வாங்க வேண்டும் என்றால் நாம் லட்சாதிபதியாக இருக்க வேண்டும்.

ஒரு கிலோ என்ன? ஒரு மாம்பழம் வாங்க வேண்டும் என்றாலும் கூட நாம் லட்சாதிபதியாக இருந்தால்தான் முடியும் என்கிறது விலை நிலவரம்.

சிறுத்தைப் படத்தில், நடிகர் கார்த்தியும், சந்தானமும் எந்தப் பொருளைப் பார்த்தாலும் அதன் விலைப் பட்டியல் அவர்களது கண்களுக்குத் தெரியும்படி ஒரு நகைச்சுவைக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதுபோல, இந்த மாம்பழத்தின் விலையும் இருக்கிறது.

கர்நாடக மாநிலம் கோபால் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தோட்டக்கலைத் துறை கண்காட்சியில், மியாசகி மாம்பழம் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் விளைந்த இந்த மாம்பழங்களைப் பார்க்கும் போது நாவில் எச்சில் ஊறும். ஆனால், மாம்பழத்தின் விலையைப் பார்க்கும் போது கண்களிலிருந்து கண்ணீர் கொட்டும். காரணம், ஒரு மாம்பழத்தின் விலை ரூ.40 ஆயிரம். ஒரு கிலோ மியாஸகி மாம்பழத்தின் விலை (இளகிய மனம் படைத்தோர் இதயத்தின் மீது கை வைத்துக் கொள்ளுங்கள்) வெறும். ரூ.2.5 லட்சம் மட்டுமே.

இந்த வகை மாம்பழங்களின் விலை இவ்வளவு அதிகமாக இருக்கக் காரணம், இவை ஜப்பானில் விளைவிக்கப்படுவதுதான்.

இந்த மாம்பழத் திருவிழாவில் வைக்கப்பட்டிருக்கும் மியாஸகி மாம்பழங்களை வாங்க முடியாத பல விவசாயிகள், அதனுடன் சுயபடம் (செல்ஃபி) எடுத்துச் செல்கிறார்கள்.  இந்த சுயபடங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுபோல, கோபால் கேசர், பென்ஷான், தஷேரி, சுவர்ணரேகா, அல்போன்ஸா, தொட்டபுரி, ரசமாரி, புனாரி, மல்லிகா போன்ற வகை வகையான மாம்பழங்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

எத்தனையோ வகை மாம்பழங்கள் வைக்கப்பட்டிருந்தாலும், பலரும் விரும்பிப் பார்த்து மகிழ்வது இந்த மியாஸகி மாம்பழமாகவே உள்ளது. அங்கு வருவோர் போவோர் அனைவரும் அதைப்பற்றியே பேசி மகிழ்கிறார்கள். 

இந்த கண்காட்சி முடிந்ததும், இந்த மாம்பழத்தை யார் சாப்பிடுவார்கள் என்று அதிகாரிகளிடம் கேட்டதற்கு, அவர்கள் வாய்விட்டு சிரித்தபடி, இந்த ஒரு மாம்பழம்தான் இங்கே இருக்கிறது என்கிறார்கள்.

இந்த வகை மாம்பழங்களை கர்நாடக விவசாயிகள் விளைவிக்க ஊக்குவித்துவருவதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com