பதக்கங்களை கங்கையில் வீச வேண்டாம்! 5 நாள்கள் அவகாசம் கொடுங்கள்: நீதி கிடைக்கும்!

ஒலிம்பிக் பதக்கங்களை கங்கையில் வீச வந்த மல்யுத்த வீரர் வீராங்கனைகளிடம் விவசாய சங்கத் தலைவர் நரேஷ் திகைத் சமரச பேச்சில் ஈடுபட்டார். 
பதக்கங்களை கங்கையில் வீச வேண்டாம்! 5 நாள்கள் அவகாசம் கொடுங்கள்: நீதி கிடைக்கும்!

ஒலிம்பிக் பதக்கங்களை கங்கையில் வீச வந்த மல்யுத்த வீரர் வீராங்கனைகளிடம் விவசாய சங்கத் தலைவர் நரேஷ் திகைத் சமரச பேச்சில் ஈடுபட்டார். 

பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வீரர், வீராங்கனைகளிடம் அவர் 5 நாள்கள் அவகாசம் அளிக்குமாறு கோரினார்.

பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக 18 வயதுக்குக் குறைவான வீராங்கனை உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் குற்றம்சாட்டினா்.

இந்த விவகாரத்தில் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் மல்யுத்த வீரா், வீராங்கனைகள் ஒரு மாதமாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹரித்வார் கங்கை கரையில் கண்ணீருடன் மல்யுத்த வீரர்கள்
ஹரித்வார் கங்கை கரையில் கண்ணீருடன் மல்யுத்த வீரர்கள்

கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி வீரர்கள் சென்றபோது காவல் துறையுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், மல்யுத்த வீரா்கள் வினேஷ் போகாட், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்கு தில்லி காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

இந்நிலையில், போராட்டத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில், மல்யுத்த வீரர்கள் தங்களின் பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசவுள்ளதாக அறிவித்திருந்தனர். அதற்காக உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் பதக்கங்களுடன் இன்று (மே 30) மாலை குவிந்தனர்.

அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பலர் அப்பகுதியில் குவிந்தனர். இதனால், காவல் துறையினர் அதிக அளவில் அப்பகுதியில் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

கங்கை ஆற்றில் வீச வந்த பதக்கங்களை நெஞ்சோடு அணைத்தபடி வீரர்
கங்கை ஆற்றில் வீச வந்த பதக்கங்களை நெஞ்சோடு அணைத்தபடி வீரர்

கங்கை ஆற்றின் கரையோரம் கண்ணீருடன் இருந்த வீரர்களிடம் விவசாய சங்கத் தலைவர் நரேஷ் திகைத் உள்ளிட்ட பலர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உழைத்து வாங்கிய பதக்கங்களை ஆற்றில் வீச வேண்டாம் என அவர்கள் கேட்டுக்கொண்டனர். அவர்களிடமிருந்த பதக்கங்களையும் சேகரித்து பெற்றுக்கொண்டனர்.

மல்யுத்த வீரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர்
மல்யுத்த வீரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர்

மேலும், 5 நாள்கள் அவகாசம் கொடுங்கள் என்றும், விரைவில் நீதி கிடைக்கும் என்றும் சமரசத்தில் ஈடுபட்டனர். விவசாய சங்க பிரதிநிதிகளின் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு மல்யுத்த வீரர், வீராங்கனைகள் ஹரித்வாரிலிருந்து திரும்பிச் சென்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com