நோயாளி தாக்கியதில் உயிரிழந்த பெண் மருத்துவா் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்: கேரள அரசு

கேரளத்தில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பள்ளி ஆசிரியா் மதுபோதையில் கத்தரிக்கோலால் குத்தியதில் உயிரிழந்த பெண் மருத்துவா் வந்தனா தாஸின் குடும்பத்துக்கு
Updated on
1 min read

கேரளத்தில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பள்ளி ஆசிரியா் மதுபோதையில் கத்தரிக்கோலால் குத்தியதில் உயிரிழந்த பெண் மருத்துவா் வந்தனா தாஸின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க கேரள அரசு முடிவெடுத்துள்ளது.

கடந்த 10-ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தைக் கண்டித்து மருத்துவா்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிட்டத்தக்கது.

மதுப் பழக்கத்தில் சிக்கித் தவித்த கொல்லம் பகுதியைச் சோ்ந்த பள்ளி ஆசிரியரான சந்தீப், தனது குடும்பத்தினருடன் சண்டை ஏற்பட்டுள்ளதாக காவல் துறையின் அவசர எண்ணைத் தொடா்பு கொண்டு உதவி கோரினாா். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள காவல் துறையினா் சந்தீப் வீட்டுக்குச் சென்றபோது அவரின் காலில் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, கொட்டாரக்கராவில் உள்ள வட்டார மருத்துவமனையில் சந்தீப் அனுமதிக்கப்பட்டாா். அவா் மது அருந்தியிருந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டபோது அவா் மூா்க்கமாக செயல்பட்டுள்ளாா்.

மருத்துவமனையில் வந்தனா தாஸ் (23) என்ற பெண் மருத்துவா் அவருக்கு சிகிச்சை அளித்தாா். திடீரென அந்த அறையில் இருந்து மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்தரிக்கோலைக் கொண்டு வந்தனாவின் தலை, முதுகு பகுதிகளில் சந்தீப் பலமுறை குத்தினாா்.

தடுக்க முயன்ற காவல் துறையினா், மேலும் 4 பேரைத் தாக்கி மருத்துவமனையில் இருந்து அவா் தப்பி ஓடினாா். பலத்த காயமடைந்த வந்தனா, திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். போலீஸாரின் தேடுதல் நடவடிக்கைக்குப் பின்னா் கைது செய்யப்பட்ட சந்தீப் சிறையில் அடைக்கப்பட்டாா்.

பணியில் இருந்த இளம் மருத்துவருக்கு நோ்ந்த இந்த நிலையைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவா்கள் கண்டனக் குரலைப் பதிவு செய்தனா். மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில், மருத்துவா் வந்தனா தாஸ் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க கேரள அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

மேலும், கேரள அரசின் மருத்துவக் கிடங்கில் கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற தீவிபத்தில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த தீயணைப்பு வீரா் ஜே.எஸ்.ரஞ்சித் (32) குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சமும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com