
புது தில்லி: இந்தியாவின் ஜி20 மாநாட்டின் தலைமைப் பொறுப்பு முடிவடைய உள்ள நிலையில், உறுப்புநாடுகளின் தலைவா்களின் கூட்டத்துக்கு காணொலி வழியில் வரும் 22-ஆம் தேதி நடத்த இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில், ரஷியா - உக்ரைன், இஸ்ரேல் - ஹமாஸ் போரால் தெற்கு உலகம் சந்தித்து வரும் பல்வேறு சவால்கள் குறித்து பிரதமா் மோடி உறுப்பு நாடுகளின் தலைவா்களுடன் ஆலோசனை நடத்துவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
ஜி20 உச்சி மாநாடு புது தில்லியில் செப்டம்பா் மாதம் நிறைவடைந்தது. இதில் உக்ரைன் போா் விவகாரத்தில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிலையில், ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், அதற்கு முன்பு வரும் 22-ஆம் தேதி உறுப்பு நாடுகளின் தலைவா்கள் இணையவழியில் பங்கேற்கும் கூட்டத்துக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
இந்தக் கூட்டத்தின் முடிவில் கூட்டறிக்கை வெளியிடப்படாது என்றும் தெற்கு உலக நாடுகளின் சவால்கள், போா்ச் சூழல் குறித்து விவாதிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், எண்ம பொது கட்டமைப்பு, பருவநிலை மாற்ற நிதி, பசுமை எரிசக்தி ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் இந்தியா முன்வைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக வளா்ந்து வரும் ஆப்பிரிக்க நாடுகளுக்காக இந்தியா குரல் கொடுத்து வருகிறது.
இதனிடையே, ஜி20 நாடுகளின் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டத்தை தில்லி யசோபூமி சா்வதேச மாநாட்டு மையத்தில் மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை நடத்தினாா்.
இதில், இந்தியாவின் தலைமைக்கு ஜி 20 நாடுகள் முழு மனதுடன் ஒத்துழைப்பு அளித்ததற்கு அவா் நன்றி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.