மதுவிருந்தில் பாம்பு விஷம் பயன்படுத்திய வழக்கு: பிக்பாஸ் வெற்றியாளர் போலீஸில் ஆஜர்

ரேவ் பார்ட்டிகளில் பாம்பு விஷம் பயன்படுத்திய வழக்கில் வட இந்தியாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் எல்விஷ் யாதவ் காவல் நிலையத்தில் ஆஜரானார்.
மதுவிருந்தில் பாம்பு விஷம் பயன்படுத்திய வழக்கு: பிக்பாஸ் வெற்றியாளர் போலீஸில் ஆஜர்

மது விருந்துகளில் பாம்பு விஷத்தினை பயன்படுத்திய வழக்கில் வட இந்தியாவைச் சேர்ந்த பிரபல யூடியூபரும், பிக்பாஸ் வெற்றியாளருமான எல்விஷ் யாதவ் காவல்நிலையத்தில் ஆஜரானார்.

உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் ரேவ் பார்ட்டி எனப்படும் மது விருந்துகளை நடத்தியதாகவும், அதில் பாம்பு விஷம் மற்றும் சட்டவிரோதமான போதைப் பொருட்களை வழங்கியதாகவும் எல்விஷ் யாதவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நொய்டா காவல்துறை துணை ஆணையர் ஹரிஷ் சந்தர் கூறுகையில், "பாம்பு விஷம் தொடர்பான வழக்கில் யூடியூபர் மற்றும் பிக் பாஸ் வெற்றியாளர் எல்விஷ் யாதவ் நொய்டா காவல்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நேரில் ஆஜரானார் என்றார்.

பாம்பு விஷம் சப்ளை செய்ததாக எல்விஷ் யாதவ் உள்ளிட்ட 6 பேர் மீது நொய்டா செக்டார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து பேசிய உத்தர பிரதேச மாநில சுற்றுசூழல் துறை அமைச்சர் அருண் சக்சேனா, “எந்தப் பிரபலமும் சட்டத்தை விடப் பெரியவர் இல்லை. சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார். 

இதற்கிடையில், ரேவ் பார்ட்டியில் பாம்பு விஷம் சப்ளை செய்யப்பட்டதில் தனக்கு தொடர்பு இல்லை என்று எல்விஷ் மறுத்துள்ளார். தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து, நவம்பர் 4-ஆம் தேதி விடியோ வெளியிட்டார்.

அந்த விடியோவில், "மேனகா காந்தியின் என்ஜிஓ அமைப்பு (பீப்பிள் ஃபார் அனிமல்ஸ்) இந்த வழக்கைத் தொடுத்திருப்பதாக அறிந்தேன். நான் கழுத்தில் பாம்புகளுடன் சுற்றித் திரிந்ததாக அவர் கூறியிருக்கிறார். அதெல்லாம் படப்பிடிப்புக்காகத்தான் கழுத்தில் போட்டிருந்தேன். இந்த வழக்கில் எனக்கு ஒரு சதவிகிதம் தொடர்பு இருந்தால் கூட 10 ஆண்டுகள் அல்லது 100 ஆண்டுகள் தண்டனையாக இருந்தாலும், நானே சரணடைவேன்." என்று அவர் தெரிவித்திருந்தார்.

எல்விஷ் யாதவ் பாஜக ஆதரவாளர் என்று கூறப்படும் நிலையில், அதே கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மேனகா காந்தியின் அமைப்பே இவர் மீது குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com