ராணுவ வீரர்கள் இருக்கும் இடமே அயோத்தி: பிரதமர் மோடி பேச்சு

ராமர் இருக்கும் இடம் அயோத்தி என்கிறார்கள், என்னை பொறுத்தவரை ராணுவ வீரர்கள் இருக்கும் இடமே அயோத்தி என எல்லை பாதுகாப்புப்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி பேசினார். 
ராணுவ வீரர்கள் இருக்கும் இடமே அயோத்தி: பிரதமர் மோடி பேச்சு


ஸ்ரீநகர்: ராமர் இருக்கும் இடம் அயோத்தி என்கிறார்கள், என்னை பொறுத்தவரை ராணுவ வீரர்கள் இருக்கும் இடமே அயோத்தி என எல்லை பாதுகாப்புப்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி பேசினார். 

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை நமது ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

அந்த வகையில் இந்த ஆண்டு  தீபாவளியை ஹிமாச்சலப் பிரதேசத்தின் லெப்சாவில் எல்லை பாதுகாப்புப்படை வீரர்களுடன் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி கொண்டாடினார். 

பினனர், அவர் வீரர்கள் மத்தியில் பேசியபோது, தீபாவளி பண்டிகையின் ஒருங்கிணைப்பும், வீரர்களின் தைரியத்தின் எதிரொலிகளும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அறிவொளியின் தருணம்.  நாட்டின் கடைசி கிராமமான எல்லைப் பகுதிகளைச் சேர்ந்த கிராமங்கள் இப்போது முதல் கிராமமாகக் கருதப்படுகிறது. 

பெண் ராணுவ வீரர்களுக்கு ராணுவ சீருடையில் இனிப்புகளை ஊட்டிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி.

குடும்பம் எங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் விழாக்கள் நடைபெறுகிறது. ஆனால், கடமையின் மீது இருக்கும் பக்தியின் காரணமாக, எல்லையைப் பாதுகாப்பதற்காக பண்டிகை நாளிலும் தமது குடும்பத்தை விட்டு விலகி இருக்கும் சூழ்நிலையில், 140 கோடி இந்தியர்களை தங்கள் குடும்பமாக கருதும் உணர்வு பாதுகாப்பு படையினருக்கு மட்டுமே. இதற்காக நாடு உங்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளது. அதனால்தான் ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் பாதுகாப்பிற்காக ஒரு 'தீபம்' ஏற்றப்படுகிறது. மேலும் ராமர் இருக்கும் இடமே அயோத்தி என்கிறார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை ராணுவ வீரர்கள் இருக்கும் இடமே அயோத்தி. "வீரர்கள் இருக்கும் இடம் எந்த கோவிலுக்கும் சளைத்ததல்ல. கடந்த 30-35 ஆண்டுகளாக ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடி வருகிறேன். நான் முதல்வராகவோ, பிரதமராகவோ இல்லாத போதும் தீபாவளி நாளில் எல்லைக்கு சென்று வீரர்களுடன் கொண்டாடுவேன். 

ராணுவ வீரர்களுக்கும், ராணுவ வீரர்களின் தியாக மரபுக்கும் மரியாதை செலுத்துவதாக தெரிவித்த மோடி, நாட்டின் வலிமையான சுவர் நாங்கள்தான் என்பதை எல்லையில் உள்ள நமது வீரர்கள் எப்போதும் நிரூபித்துள்ளனர்.

தேசத்தைக் கட்டமைப்பதில் ஆயுதப்படைகளின் பங்களிப்பை எடுத்துரைத்த பிரதமர், பூகம்பம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகள் மற்றும் சர்வதேச அமைதிப் பணிகள் போதும் ஆயுதப்படைகள் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளன. "ஆயுதப்படைகள் இந்தியாவின் பெருமையை புதிய உயரங்களுக்கு கொண்டு சென்றுள்ளன" என்று குறிப்பிட்டார். கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் அமைதி காக்கும் படையினருக்கான நினைவு மண்டபம் ஒன்றை முன்மொழிந்ததையும், அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதையும் குறிப்பிட்ட பிரதமர், உலக அமைதியை நிலைநாட்டுவதற்கான அவர்களின் பங்களிப்புகளை அது அழியாததாக மாற்றும் என்றும் கூறினார்.

ஆண் ராணுவ வீரர்களுக்கு ராணுவ சீருடையில் இனிப்புகளை ஊட்டிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி.

இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டினருக்கும் வெளியேற்றும் பணிகளில் இந்திய ஆயுதப் படைகளின் பங்கை குறிப்பிட்டு பேசிய மோடி, சூடான், துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பிறகு மீட்புப் பணியையும் நினைவு கூர்ந்தார். "போர்க்களம் முதல் மீட்புப் பணிகள் வரை, உயிர்களைக் காப்பாற்ற இந்திய ஆயுதப் படைகள் உறுதிபூண்டுள்ளன" என்று பிரதமர் கூறினார். மேலும் நாட்டின் ஆயுதப்படைகள் குறித்து ஒவ்வொரு குடிமகனும் பெருமிதம் கொள்வதாக தெரிவித்தார். 

தற்போதைய உலக சூழ்நிலையில் இந்தியாவிடமிருந்து உலகளாவிய எதிர்பார்ப்புகளை சுட்டிக்காட்டிய மோடி, நாட்டில் பாதுகாப்பான எல்லை, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தினார். "இமயமலை போன்ற உறுதியுடன் துணிச்சலான வீரர்களால் அதன் எல்லைகள் பாதுகாக்கப்படுவதால் இந்தியா பாதுகாப்பாக உள்ளது" என்று கூறினார்.

எல்லைகள் பாதுகாக்கப்படும் வரை நாடு சிறந்த எதிர்காலத்திற்காக பாடுபட முடியும் என்று வலியுறுத்திய பிரதமர் மோடி, நாட்டின் வளர்ச்சிக்கு ஆயுதப்படைகளின் வலிமை, தீர்மானங்கள் மற்றும் தியாகங்களே காரணம் என்று பாராட்டினார்.

தேசம் இப்போது தற்சார்பு பாரதத்தின் பாதையில் அடியெடுத்து வைத்துள்ளது. பாதுகாப்புத் துறையில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியையும், உலகளாவிய வீரராக அது உருவெடுத்திருப்பதாகவும், ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளின் வலிமை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவித்தவர், முன்பு சிறிய தேவைகளுக்குக் கூட மற்றவர்களைச் சார்ந்திருந்ததை நினைவு கூர்ந்தவர், அதே நேரத்தில் இன்று நட்பு நாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. 2016 ஆம் ஆண்டில் இருந்து நாட்டின் பாதுகாப்பு ஏற்றுமதி 8 மடங்கு அதிகரித்துள்ளது. ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இது ஒரு சாதனை என்று கூறினார்.

மேலும், உயர்  தொழில்நுட்பம் மற்றும் சி.டி.எஸ் போன்ற முக்கியமான அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குறித்து பேசியவர், இந்திய ராணுவம் தொடர்ந்து மிகவும் நவீனமாகி வருகிறது. எதிர்காலத்தில் தேவைப்படும் காலங்களில் இனி மற்ற நாடுகளை நாட வேண்டியதிருக்காது. அதிகரித்து வரும் இந்த தொழில்நுட்ப பரவலுக்கு மத்தியில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் மனிதப் புரிதலை எப்போதும் முதன்மையாக வைத்திருக்குமாறு ஆயுதப்படைகளை வலியுறுத்திய மோடி, தொழில்நுட்பம் ஒருபோதும் மனித உணர்வுகளை மீறக்கூடாது என்று வலியுறுத்தினார்.

இன்று, உள்நாட்டு வளங்கள் மற்றும் உயர்தர எல்லை உள்கட்டமைப்பும் நமது பலமாக மாறி வருகின்றன. இதில் பெண்கள் சக்தியும் முக்கிய பங்கு வகிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ராணுவ வீரர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் வரலாற்றின் திசையை தீர்மானிக்கிறது. உங்கள் ஆதரவுடன், நாடு தொடர்ந்து வளர்ச்சியின் புதிய உயரங்களைத் தொடும். நாட்டின் ஒவ்வொரு தீர்மானத்தையும் ஒன்றிணைந்து நிறைவேற்றுவோம் என்று மோடி தெரிவித்தார்.

வீரர்களுடன் ராணுவ சீருடையில் தேசபக்தி பாடல்களை பாடி, இனிப்புகளை ஊட்டிவிட்டு, அவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com