

மராத்தா சமூக இடஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
மகாராஷ்டிரத்தில் நான்டெட் நகரில் மராத்தா சமூக இடஒதுக்கீடு விவகாரத்தில் மராத்தா சமூகத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
மர்லாக் கிராமத்தில் வசிக்கும் தாஜிபா ராம்தாஸ் கடம், கடந்த நவ.11 ஆம் தேதி ஜெண்டா சவுக் பகுதிக்கு வேலை நிமித்தமாக சென்றபோது விஷம் குடித்ததாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "தாஜிபா மயங்கி கிடந்ததை பார்த்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நவம்பர் 12 ஆம் தேதி உயிரிழந்தார்" எனக் கூறினார்.
உயிரிழந்த தாஜிபாவிடம் இருந்த ஒரு குறிப்பை காவல் துறையினர் கண்டுபிடித்தனர், அதில், "இது என்னுடைய அரசாங்க வேலை பற்றிய கேள்வி" என தாஜிபா எழுதியிருந்தார்.
மேலும், பாக்யநகர் காவல் நிலையத்தில் தாஜிபாவின் மரண வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.
மகாராஷ்டிரத்தில் உள்ள 30 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் கொண்ட மராத்தா சமூகத்தினர் கல்வி மற்றும் அரசு வேலைகளுக்கு இடஒதுக்கீடு கோரி வருகின்றனர்.
மராத்தா சமூக ஆர்வலர் மனோஜ் ஜரங்கே, வரும் டிசம்பர் 24ஆம் தேதிக்குள் மராத்தா சமூகத்துக்கான இடஒதுக்கீட்டை அறிவிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு புதிய கெடு விதித்துள்ளார்.
மராத்தா இளைஞர்கள் அமைதியான முறையில் இடஒதுக்கீடுக்காக போராட வேண்டும் என்றும், தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.