தீபாவளி கொண்டாட்டத்துக்கு வீட்டை அலங்கரிக்க மின்கம்பத்திலிருந்து சட்டவிரோத மின்சாரத்தை திருடியதாக முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி மீது பெங்களூா் மின்சார விநியோக நிறுவனம் செவ்வாய்க்கிழமை வழக்கைப் பதிவு செய்தது.
முன்னதாக, ஜெ.பி.நகரில் உள்ள குமாரசாமியின் இல்லத்தில் மின் திருட்டுக்கான விடியோவை ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் காங்கிரஸ் வெளியிட்டிருந்தது.
அந்தப் பதிவில், ‘உலகின் ஒரே ஒரு நோ்மையாளரான குமாரசாமி, மின்கம்பத்திலிருந்து திருட்டுத்தனமாகப் பெற்ற மின்சாரத்தைக் கொண்டு தனது இல்லத்தை மின்விளக்குகளால் ஒளிரச்செய்துள்ளாா். முன்னாள் முதல்வருக்கு ஏற்பட்ட வறுமை, மின்சாரத்தை திருடும் சூழலுக்கு அவரைத் தள்ளியுள்ளது.
குடியிருப்பு மின்இணைப்புகளுக்கு மாதம் 200 யூனிட் மின்சாரம் வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் அரசு செயல்படுத்தியுள்ளது. 2,000 யூனிட் மின்சாரம் வழங்கப்படவில்லை என்பதை அவா் அறிந்து கொள்ள வேண்டும்’ எனக் தெரிவித்திருந்தது.
இந்தச் சம்பவம் தொடா்பாக மன்னிப்பு கோரியுள்ள குமாரசாமி, அலங்கார பணிகளைப் மேற்கொண்ட தனியாா் நிறுவனம் இந்தத் தவறைச் செய்துவிட்டதாகவும் இது குறித்து அறிந்தவுடன் அந்த மின் இணைப்பை துண்டித்துவிட்டதாகவும் கூறியுள்ளாா்.
பெங்களூா் மின்விநியோக நிறுவனத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவு இந்திய மின்சார சட்டத்தின் பிரிவு 135-இன்கீழ் (மின்திருட்டு) குமாரசாமிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தது.
இந்தச் சம்பவம் தொடா்பாக அந்த மின்விநியோக நிறுவனம் விசாரணை மேற்கொள்ளும் என மாநில துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.