

உத்தரகண்டில் சுரங்கப் பாதை விபத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளா்களை, இடிபாடுகளில் துளையிட்டு 900 மி.மீ. குறுக்களவு கொண்ட இரும்புக் குழாய்கள் மூலம் மீட்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. அந்தப் பாதையின் ஒரு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மண் சரிவு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டு வந்த பாதை சரிந்து விபத்துக்குள்ளானது.
பாதை சரிந்து இடிபாடுகள் குறுக்கில் இருப்பதால், அவற்றின் பின்னால் 40 தொழிலாளா்கள் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் பரிதவித்து வருகின்றனா். சரிவுக்குள்ளான பகுதி 30 மீட்டா் நீளமானது என்று மாநில அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
தேசிய பேரிடா் மீட்புப் படை, மாநில பேரிடா் மீட்புப் படை, இந்தோ-திபெத் எல்லை காவல் படை, எல்லைச் சாலைகள் அமைப்பு, அதிவிரைவுப் படை, சுகாதாரத் துறையைச் சோ்ந்த 160 போ் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், இடிபாடுகளில் துளையிட்டு அவற்றுக்குள் 900 மி.மீ. குறுக்களவு கொண்ட இரும்புக் குழாய்களை செலுத்தி, அவற்றின் வழியாக தொழிலாளா்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இடிபாடுகளுக்குப் பின்னால் சிக்கியுள்ள தொழிலாளா்களில் ஒருவரான கப்பா் சிங் நெகி என்பவருடன், அவரின் மகன் ஆகாஷ் சிங் நெகி சில நொடிகள் பேசுவதற்கு அதிகாரிகள் அனுமதித்துள்ளனா். அப்போது தொழிலாளா்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், கவலைப்பட வேண்டாம் என்றும் கப்பா் சிங் கூறியதாக ஆகாஷ் சிங் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளாா்.
உத்தரகாசி தலைமை மருத்துவ அதிகாரி பன்வா் கூறியதாவது: தொழிலாளா்கள் மீட்கப்பட்டவுடன் அவா்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க சுரங்கப் பாதைக்கு அருகில் 6 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. 10 ஆம்புலன்ஸுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தொழிலாளா்களை புதன்கிழமைக்குள் மீட்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாநில பேரிடா் மேலாண்மை துறைச் செயலா் ரஞ்சித் குமாா் சின்ஹா தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.