மத்தியபிரதேசம் தேர்தல்: திமானி தொகுதியில் 2 வாக்குச் சாவடிகள் மீது கல் வீச்சு, ஒருவர் காயம்

மத்தியப் பிரதேசத்தின் 230 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மத்தியபிரதேசம் தேர்தல்: திமானி தொகுதியில் 2 வாக்குச் சாவடிகள் மீது கல் வீச்சு, ஒருவர் காயம்



மொரேனா (மத்திய பிரதேசம்): மத்தியபிரதேசத்தில் 230 தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை (நவ. 17) தோ்தல் வாக்குப் பதிவு தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மொரேனா மாவட்டம் திமானி தொகுதியின் 147 மற்றும் 148 இரண்டு வாக்குச் சாவடிகளில் இரு பிரிவினர் கல் வீச்சுத் தாக்குதல் நடத்தினர், இதில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மத்தியப் பிரதேசத்தின் 230 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. பாலகாட் மாவட்டத்தின் பைஹார், லாஞ்சி மற்றும் பர்ஸ்வாரா தொகுதிகள் மற்றும் மண்ட்லா மற்றும் திண்டோரி மாவட்டங்களில் உள்ள சில சாவடிகளில் மாலை 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். பிற வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்கலாம்.

கடந்த 20 ஆண்டுகளில் ஏறக்குறைய 18 ஆண்டுகளாக பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. மொத்தம் 2,533 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

5.6 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளா்களுக்காக மாநிலம் முழுவதும் 64,000-க்கும் மேல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

ஆட்சியைத் தக்கவைக்க பாஜகவும், பாஜக அரசாங்கத்தை அகற்ற காங்கிரஸ் தீவிரம் காட்டி வரும் இந்த தோ்தலில், எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜவாதி, ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் தனித்தனியாக களத்தில் உள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி 183 தொகுதிகளில் களத்தில் உள்ளது.

வாக்குப்பதிவையொட்டி, 700 கம்பெனி மத்தியப் படைகளும், 2 லட்சம் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

2,533 வேட்பாளர்களின் தேர்தல் விதியை இந்தத் தேர்தல் தீர்மானிக்கும்.

மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com