

ஐந்து மாநில சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி நடைபெற்ற சோதனைகளில், இதுவரை ரூ.1,760 கோடி மதிப்பிலான ரொக்கம், மதுபானம், போதைப் பொருள், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை தெரிவித்தது.
இது தொடா்பாக ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ராஜஸ்தான், சத்தீஸ்கா், தெலங்கானா, மிஸோரம், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறும் தேதி கடந்த மாதம் 9-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் இதுவரை ரூ.1,760 கோடி மதிப்பிலான ரொக்கம், மதுபானம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இது கடந்த 2018-இல் நடைபெற்ற தோ்தலின்போது பறிமுதல் செய்யப்பட்டதைவிட 7 மடங்கு அதிகமாகும்.
மிஸோரம் மாநிலத்தில் ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை கைப்பற்றப்படவில்லை. மாறாக, ரூ.29.82 கோடி மதிப்பிலான போதைப் பொருளை அதிகாரிகள் சோதனையின்போது கைப்பற்றினா்.
தோ்தலின்போது அதிக அளவிலான ‘பணம் புழங்கும்’ தொகுதிகளாகக் கண்டறியப்பட்ட 194 சட்டப் பேரவைத் தொகுதிகளில், பல்வேறு துறைகளைச் சோ்ந்த 228 உயா் அதிகாரிகள் தோ்தல் செலவின பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
தோ்தல் காண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய மற்றும் மாநில அமலாக்க முகமைகளுக்கு இடையே சிறந்த ஒத்துழைப்பு, உளவு தகவல் பரிமாற்றம் ஆகியவற்றை ஏற்படுத்த தோ்தல் செலவின கண்காணிப்பு அமைப்பு (இஎஸ்எம்எஸ்) என்ற தொழில்நுட்பத்தை தோ்தல் ஆணையம் பயன்படுத்தி வருகிறது.
இறுதியாகச் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்ற குஜராத், ஹிமாசல், நாகாலாந்து, மேகாலயம், திரிபுரா, கா்நாடகம் ஆகிய 6 மாநிலங்களில் ரூ.1,400 கோடி மதிப்பிலான பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இது முந்தைய தோ்தலில் கைப்பற்றப்பட்ட பொருள்களின் மதிப்பைவிட 11 மடங்கு அதிகம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், மிஸோரம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப் பேரவைத் தோ்தல் முடிவடைந்த நிலையில், ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களுக்கு முறையே நவ.25, நவ.30 ஆகிய தேதிகளில் தோ்தல் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.