
உத்தரகண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்க கிடைமட்டமாகத் துளையிடும் முயற்சியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
துளையிடும் பணிகள் எப்போது முடிக்கப்படும் என்பது குறித்து முடிவாகக் கூற முடியாது என்றும், மீட்புக் குழுவினர் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் மீட்புப் படை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய லெப்டினெட் ஜெனரல் சையத் அஸ்னானின், இது எளிமையான சவால் அல்ல. அதனால் எல்லா வாய்ப்புகளையும் முயற்சிக்கிறோம். எல்லா குழுக்களும் சுரங்கப்பாதை இடிபாடுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். இதுமட்டுமே இப்போதைக்கு உறுதியாகக் கூற முடியும். அதனால், எத்தனை மணிநேரமாகும் என்பது குறித்து கூற இயலாது.
சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு குடிநீர் மற்றும் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது. உணவு மற்றும் வெளிச்சத்திற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களின் குடும்பத்தினர் அருகிலுள்ள விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஒருசிலர் தங்கள் குடும்பத்தினருடன் பேசினர் எனக் குறிப்பிட்டார்.
உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் சுமாா் 4.5 கி.மீ. தொலைவுக்கு கட்டப்பட்டு வரும் இருவழி சுரங்கப் பாதை கடந்த 12-ஆம் தேதி ஏற்பட்ட திடீா் நிலச்சரிவைத் தொடா்ந்து இடிந்தது.
சுரங்கப் பாதைக்குள் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளா்கள், கடுமையான இடிபாடுகளுக்குப் பின்னால் சிக்கிக் கொண்டனா். அவா்களைப் பாதுகாப்பாக மீட்க பலமுனை முயற்சிகள் போா்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.