உச்ச நீதிமன்றம் விடுத்த எச்சரிக்கைக்கு பாபா ராம்தேவ் பதில்!

உச்சநீதிமன்றம் எச்சரித்த நிலையில், அவரது நிறுவனத்திற்கு எதிராக தவறான பிரசாரம் செய்யப்படுவதாக ராம்தேவ் கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றம் விடுத்த எச்சரிக்கைக்கு பாபா ராம்தேவ் பதில்!

பதஞ்சலி ஆயுர்வேத மருந்துகளுக்கான விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் எச்சரித்ததை அடுத்து, அவரது நிறுவனத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் நடப்பதாக ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராம்தேவ், "உச்ச நீதிமன்றம்  பதஞ்சலியைக் கண்டித்ததாக நேற்று முதல் பல்வேறு ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. பொய் பிரசாரம் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. நாங்கள் உச்ச நீதிமன்றத்தை மதிக்கிறோம். ஆனால் நாங்கள் எந்த பொய் பிரசாரமும் செய்யவில்லை.

மேலும் யோகா மற்றும் ஆயுர்வேதத்திற்கு எதிராக பிரசாரம் செய்ய ஒரு சில மருத்துவர்கள் குழு அமைத்து இருப்பதாக கூறிய ராம்தேவ், "நாங்கள் பொய் கூறுகிறோம் என்றால் எங்களுக்கு 1000 கோடி ரூபாய் அபராதம் விதியுங்கள், நாங்கள் மரண தண்டனைக்கு கூட தயாராக உள்ளோம். ஆனால் நாங்கள் பொய் கூறவில்லை என்பது நிரூபணமானால் பொய் பிரசாரம் செய்பவர்களைத் தண்டியுங்கள்" என்று கூறினார். 

பதஞ்சலி வெளியிட்டுள்ள ஆயுர்வேத பொருட்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ சான்றுகளும் இருப்பதாகவும் ராம்தேவ் உறுதியளித்தார்.

முன்னதாக, நவீன மருத்துவ முறைகளுக்கு எதிராக தவறான தகவல்கள் மற்றும் விளம்பரங்களை தொடர்ந்து வெளியிட்டதற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கண்டித்தது.

அத்தகைய விளம்பரங்களுக்கு எதிராக இந்திய மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் அசானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, பதஞ்சலி நிறுவனத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com