ரஜௌரியில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி இரங்கல்

ரஜௌரியில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி இரங்கல்

ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரியில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் உயிரிழந்த 5 ராணுவ வீரர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
Published on

ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரியில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் உயிரிழந்த 5 ராணுவ வீரர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: “இரண்டு கேப்டன்கள் மற்றும் மூன்று வீரர்கள் ஆகிய ஐந்து ராணுவ வீரர்கள் ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரியில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் உயிரை விட்டு, நாட்டுக்காக மிகப்பெரிய தியாகம் செய்துள்ளனர்.

பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒப்பற்ற தைரியத்தை வெளிப்படுத்திய கர்நாடகாவின் மங்களூரு பகுதியைச் சேர்ந்த கேப்டன் எம்.வி.பிரஞ்சால், உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவைச் சேர்ந்த கேப்டன் ஷுபம் குப்தா, ஹவில்தார் அப்துல் மஜீத், லான்ஸ் நாயக் சஞ்சய் பிஸ்த் மற்றும் சச்சின் லௌர் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். 

அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். இந்தியா எப்போதும் பயங்கரவாதத்திற்கு எதிராக நிற்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ளதாவது: “ரஜௌரியில் ஐந்து ராணுவ வீரர்கள் உயிரிழந்த செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. நாகரீக சமூகத்தில் பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கு இடமே கிடையாது. ஒட்டுமொத்த நாடும் பயங்கரவாதத்திற்கு எதிராக இருக்கிறது. 

நாட்டிற்காக உயிரைத் துறந்த துணிச்சல்மிக்க வீரர்களுக்கு இரங்கல்கள். அவர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் நம் நாடு எப்போதும் கடன்பட்டுள்ளது.” என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com