திருமண விழாக்களை வெளிநாடுகளில் நடத்த வேண்டாம் : பிரதமர் மோடி

இந்தியாவில் உள்ள பெரிய குடும்பங்கள்  திருமண விழாக்களை உள்நாட்டிலேயே நடத்த வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
திருமண விழாக்களை வெளிநாடுகளில் நடத்த வேண்டாம் : பிரதமர் மோடி

தில்லி :  இந்தியாவை சேர்ந்த சில பெரிய குடும்பங்கள் தங்கள் இல்லத் திருமண விழாக்களை இந்தியாவில் நடத்துமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்று (நவ. 26) ’மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, ”இப்போது திருமண காலம் ஆரம்பமாகிவிட்டது. இந்த திருமண காலத்தில், சில வணிக நிறுவனங்கள் ரூ.5 லட்சம்  கோடி  அளவுக்கான வணிகம் நடைபெறும் என்று கணித்துள்ளன. 

இந்தநிலையில், திருமணத்திற்கான பொருட்களை வாங்கும்போது, நீங்கள் அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

திருமணம் குறித்த பேச்சு வரும்போதெல்லாம்  ஓர் எண்ணம் என்னை நீண்டகாலாமாகவே உறுத்தி வருகிறது.  என் மனதில் உள்ள  வேதனையை  என் குடும்ப உறுப்பினர்களிடம் (மக்களிடம்) வெளிப்படுத்துகிறேன். 

ஒரு சில குடும்பங்கள் வெளிநாடுகளுக்கு சென்று அங்கு திருமணத்தை நடத்துகின்றன. இது அனைத்தும் அவசியமானதா? இந்திய மண்ணில் மக்கள் திருமண விழாக்களை கொண்டாடினால், நம் நாட்டின் பணம், நாட்டிலேயே இருக்கும். திருமண விழாக்களின் போது, நம் நாட்டிலுள்ள மக்கள் சேவையாற்ற  ஒரு வாய்ப்பும் அமையும்.  ஏழை எளியோர் கூட தங்கள் குழந்தைகளிடம் உங்கள் திருமணம் பற்றி பேசுவார்கள்.

பெரிய குடும்பங்கள் தொடர்பான விவாதம் இது. என் வலி அந்த பெரிய குடும்பங்களை போய்ச் சேரும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என்று பேசினார்.

மேலும், ’உள்ளூர் மக்களுக்கான குரல்?’ என்ற இந்த பிரசாரத்தை  மக்கள் விரிவாக கொண்டு செல்ல வேண்டுமெனவும், இதுபோன்ற திருமணங்களை நம் சொந்த நாட்டில் ஏன் நடத்தக்கூடாது? என்ற கேள்வியும் எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “தேசத்தை கட்டமைப்பதில், அதிகளவிலான மக்கள் பங்காற்றத் தொடங்கினால், அந்த தேசம் முன்னோக்கிச் செல்வதை உலகில் எந்த சக்தியாலும், தடுத்து நிறுத்த முடியாது.

இந்தியாவில் பல மாற்றங்கள் 140 கோடி நாட்டு மக்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டு வருகிறது  என்பது இன்று, வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. இந்த பண்டிகை காலம் இதற்கு நேரடி உதாரணமாக விளங்கியது. 

கடந்த முறை ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், ’உள்ளூர் மக்களுக்கான குரல்’ அதாவது உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குவது, என்பதை வலியுறுத்தி  பேசியிருந்தேன். கடந்த சில நாள்களுக்குள், தீபாவளி மற்றும் அதனைத்தொடர்ந்து வந்த பண்டிகைகளையொட்டி, நாட்டில் ரூ.4 லட்சம் கோடிக்கும் அதிகமாக வணிகம்  நடைபெற்றுள்ளது. 

இந்த காலகட்டத்தில், உள்நாட்டு தயாரிப்புகளை  வாங்க வேண்டுமென்ற தீவிர ஆர்வம் மக்களிடம் காணப்பட்டது. குழந்தைகள் கூட கடைகளில் பொருள்களை வாங்கும்போது அவை உள்நாட்டுத் தயாரிப்புகளா?  என்ற அடையாள அட்டை ஒட்டப்பட்டுள்ளதா என்பதை சோதித்து பார்க்கத் தொடங்கிவிட்டனர்.
 
அதுமட்டுமன்றி, ஆன்லைன் முறையில் பொருள்களை வாங்கும்போதும், அவை எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்பதை மக்கள் மறந்துவிடக்  கூடாது.

’உள்ளூர் மக்களுக்கான குரல்’ என்ற பிரசாரத்தின் வெற்றியால்,  ’வளர்ச்சியடைந்த இந்தியா - செழிப்பான இந்தியா’ என்ற நிலையை எட்டுவதற்கான கதவுகள் திறக்கப்படுகிறது. இந்த பிரசாரம், ஒட்டுமொத்த தேசத்தின் பொருளாதாரத்தையும் வலுப்படுத்துகிறது, வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்துகிறது, நாட்டில் சமத்துவான வளர்ச்சி ஏற்படுவதை உறுதிப்படுத்துகிறது,  நமது பொருளாதாரத்தையும் பாதுகாக்கிறது.

மேலும், இது நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களுக்கு சமமான வாய்ப்புகளையும் வழங்குகிறது” என்று பிரதமர் மோடி பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com