சந்திரசேகர ராவ் ஆட்சியில் ஊழல்களுக்கு எல்லையே இல்லை: அமித் ஷா விமர்சனம்

பிஆர்எஸ் கட்சியும், காங்கிரஸும் மறைமுக ஒப்பந்தம் செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம் செய்துள்ளார். 
சந்திரசேகர ராவ் ஆட்சியில் ஊழல்களுக்கு எல்லையே இல்லை: அமித் ஷா விமர்சனம்

சந்திரசேகர ராவ் ஆட்சியில் ஊழல்களுக்கு எல்லையே இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம் செய்துள்ளார். 

119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு நவம்பர் 30-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே கடும் மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.

தேர்தலுக்கு இன்னும் வெகுசில தினங்களே இருப்பதால் இந்த கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தெலங்கானாவின் மாபூப்நகரில் இன்று (நவம்பர் 26) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு அமித் ஷா பேசியதாவது: “வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலானது தெலங்கானாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடியதாகும்.

கடந்த 10 ஆண்டுகால சந்திரசேகர ராவ் ஆட்சியில் ஊழல்களுக்கு எல்லையே இல்லை. மருத்துவமனைகள், கல்லூரிகள் கட்டுவதாக அவர் வாக்குறுதி அளித்தார். ஆனால் அதனை செயல்படுத்தவில்லை. 

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதாக கூறினார். அதனையும் செய்யவில்லை. அவர் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. 

நீங்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தாலும் அதன் எம்.எல்.ஏ.க்கள் பிஆர்எஸ் கட்சிக்கு சென்று விடுவார்கள். பாரத ராஷ்டிர சமிதியும், காங்கிரஸ் கட்சியும் மறைமுக கூட்டணி அமைத்துள்ளன. தேர்தல் முடிவுக்குப் பிறகு சந்திரசேகர ராவ் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவளிப்பதாகவும், அதற்கு பதிலாக, ராகுல் பிரதமராக பிஆர்எஸ் கட்சி உதவுவதாகவும் மறைமுக ஒப்பந்தம் செய்துள்ளன.” என்று அமித் ஷா தெரிவித்தார்.

2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் பிஆர்எஸ் கட்சி 88 இடங்களில் வென்று ஆட்சியமைத்தது. காங்கிரஸ் 19 தொகுதிகளிலும், ஏஐஎம்ஐஎம் 7 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாஜக வெறும் 1 தொகுதியில் மட்டுமே வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com