தொழிலாளர்களை குடும்பங்களுடன் இணைக்க.. சுரங்கத்திலிருந்து சொந்த ஊர் வரை.. 

சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளா்களுடன், அவர்களது குடும்பத்தினர் அவ்வப்போது தொடர்புகொள்ள வசதியாக பிஎஸ்என்எல் நிறுவனம் லேண்ட்லைன் வசதியை ஏற்படுத்தியிருக்கிறது.
தொழிலாளர்களை குடும்பங்களுடன் இணைக்க.. சுரங்கத்திலிருந்து சொந்த ஊர் வரை.. 

உத்தரகண்ட் மாநிலம் உத்தர்காசியில் நிலச்சரிவால் சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளா்களுடன், அவர்களது குடும்பத்தினர் அவ்வப்போது தொடர்புகொள்ள வசதியாக பிஎஸ்என்எல் நிறுவனம் லேன்ட்லைன் வசதியை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தர்காசியில் உள்ள சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களுக்கும், சுரங்கத்துக்கு வெளியேயும் அவர்களது சொந்த கிராமங்களுக்குத் திரும்பிய அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையே தொலைபேசி சேவையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்.

இடிபாடுகளுக்கு இடையே துளையிட்டு குழாய் அமைத்து அதன் வழியாக, சுரங்கத்துக்குள் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் பிற தேவைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது, தடையற்ற தகவல்தொடர்புக்கு இருவழி லேண்ட்லைன் அமைப்பை பிஎஸ்என்எல் நிறுவனம் அமைத்துள்ளது.

இது குறித்து பிஎஸ்என்எல் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, இந்த சுரங்கத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் ஒரு தற்காலிக தொலைபேசி இணைப்பகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் தொழிலாளர்கள், குடும்ப உறுப்பினர்கள், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்புகொள்ள வசதி ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழாய் செலுத்தும் பாதையில் இடிபாடுகளில் சிக்கியுள்ள துளையிடும் ‘ஆகா்’ இயந்திரத்தின் பிளேடுகளை அகற்றுவதற்கான பணியை இந்திய ராணுவத்தின் ‘பொறியாளா்கள் குழு’ வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா். இந்த நிலையில், அந்த பிளேடு முழுமையாக அகற்றப்பட்டு, துளையிடும் பணி தொடங்கியிருக்கிறது.

உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வந்த சுரங்கப் பாதை கடந்த 12-ஆம் தேதி ஏற்பட்ட திடீா் நிலச்சரிவைத் தொடா்ந்து இடிந்தது.

இதனால் சுரங்கப் பாதைக்குள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளா்கள், கடுமையான இடிபாடுகளுக்குப் பின்னால் சிக்கிக் கொண்டனா்.

தொழிலாளா்கள் மயங்கிவிடாமல் இருக்க ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. இடிபாடுகள் வழியாக 6 அங்குலம் அகலமுள்ள குழாய் செலுத்தப்பட்டு, அதன்மூலம் அதிக அளவிலான உணவுகளையும் கைப்பேசி, அதற்கான மின்னேற்றிகளையும் அனுப்பப்பட்டன.

இதனிடையே, 60 மீட்டா் தொலைவுக்கு 80 செ.மீ. விட்டம் கொண்ட குழாயைச் செலுத்தி தொழிலாளா்களை மீட்பதற்கான பணிகள் தொடங்கி நடந்து வந்தன.

குழாயைச் செலுத்துவதற்கு துளையிடப்பட்ட பாதையில் இரும்புக் கம்பிகள் குறுக்கிட்டதால் மீட்புப் பணிகள் அவ்வப்போது நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டன. துளையிடும் 25 டன் எடைக் கொண்ட ஆகா் இயந்திரம் நிறுவப்பட்டுள்ள கான்கிரீட் தளத்தில் விரிசல் ஏற்பட்டதால், மீட்புப் பணிகள் தொடா்வதில் சிக்கல் நிலவியது.

கான்கிரீட் தளத்தில் உண்டான விரிசல் சீா் செய்யப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டன. தொடங்கிய ஒரு மணிநேரத்தில் ஆகா் இயந்திரத்தின் பிளேடுகள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டது. இதனால் கிடைமட்டமாக குழாய் செலுத்தும் மீட்புப் பணிகள் முழுவதுமாக முடங்கியது.

மீதமுள்ள 10-12 மீட்டா் தொலைவுக்கு பணியாளா்களே நேரடியாக குழாயைச் செலுத்துவதற்கு இயந்திரத்தின் பிளேடை அகற்றுவது அவசியமாகிறது. இந்தப் பணியை மேற்கொள்ள இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் கட்டுமானப் படைப்பிரிவைச் சோ்ந்த பொறியாளா்கள் குழு வீரா்கள் ஹைதராபாத்தில் இருந்து சம்பவ இடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தனா். ராணுவ வீரா்களால் பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

வெள்ளிக்கிழமைக்கு முன்பு மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்த நிலையில், சில மணிநேரங்களில் தொழிலாளா்கள் மீட்கப்படுவாா்கள் என்ற நம்பிக்கைச் செய்தி வெளியானது. துரதிருஷ்டவசமாக ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக மீட்புப் பணிகள் மேலும் சில நாள்களுக்கு நீடிக்க இருக்கிறது. தொழிலாளா்களைக் காண 14 நாள்களாக நீளும் காத்திருப்பால் அவா்களின் குடும்பத்தினா் கவலையடைந்துள்ளனா்.

செங்குத்தாக துளையிடும் பணிகள்.. 
மலைக்கு மேலே இருந்து செங்குத்தாக 86 மீட்டருக்கு குழாயைச் செலுத்தி தொழிலாளா்களை மீட்பதற்கான மாற்றுத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துளையிடும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. முதல் நாளில், 19 மீட்டா் ஆழத்துக்கு துளையிடப்பட்டது. எந்த இடையூறும் இல்லாத சூழலில், 100 மணிநேரத்தில் (4 நாள்கள்) தொழிலாளா்களை அடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதையில் குறுக்கே உள்ள பாறைகளின் தன்மையைக் கண்டறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com