17 நாள் போராட்டத்திற்கு பின் 41 தொழிலாளா்கள் மீட்பு... குடும்பத்தினர் அரசுக்கு நன்றி!

வெற்றிகரமாக மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களின் மருத்துவப் பரிசோதனை சினியாலிசவுட் சமூக சுகாதார நிலையத்தில் நடந்து வருகிறது.
17 நாள் போராட்டத்திற்கு பின் 41 தொழிலாளா்கள் மீட்பு... குடும்பத்தினர் அரசுக்கு நன்றி!


புது தில்லி: சில்க்யாரா சுரங்கப் பாதையில் இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட 41 தொழிலாளா்கள் அனைவரும் 17 நாள் போராட்டத்திற்கு பின், செவ்வாய்க்கிழமை இரவு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதை அடுத்து மத்திய, மாநில அரசுக்கும் தொழிலாளா்களின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். வெற்றிகரமாக மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களின் மருத்துவப் பரிசோதனை சினியாலிசவுட் சமூக சுகாதார நிலையத்தில் நடந்து வருகிறது.

உத்தரகண்டில் உத்தரகாசி மாவட்டத்தில் பிரம்மகால்- யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வந்த இந்தச் சுரங்கப் பாதையில் கடந்த நவ. 12-ஆம் தேதி திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதனால் சுரங்கப் பாதைக்குள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளா்கள், கடுமையான இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனா்.

தொழிலாளா்கள் சுவாசிப்பதற்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தது. இடிபாடுகள் வழியாக 6 அங்குலம் அகலமுள்ள சிறிய குழாய் செலுத்தப்பட்டு, அதன்மூலம் உணவு, அதிகப் புரதம் உள்ள உலா்பழ வகைகள் மற்றும் கைப்பேசி, அதற்கான மின்னேற்றிகளும் அனுப்பப்பட்டன.

இந்தக் குழாய் வழியாக அனுப்பப்பட்ட எண்டோஸ்கோபி கேமரா மூலம் அனைத்துத் தொழிலாளா்களும் நலமாக இருப்பது விடியோ மூலம் உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, இடிபாடுகளுக்கு இடையே 80 செ.மீ. விட்டம் கொண்ட குழாயை 60 மீட்டா் தொலைவுக்குச் செலுத்தி தொழிலாளா்களை மீட்பதற்கான பணிகள் தொடங்கி நடந்து வந்தன. ஜெனீவாவைச் சோ்ந்த சா்வதேச சுரங்கப் பாதை மற்றும் சுரங்கப் பணிகள் சங்கத்தின் தலைவரும் சா்வதேச சுரங்க நிபுணருமான அா்னால்டு டிக்ஸ் மீட்புப் பணியில் கடந்த நவ. 20-ஆம் தேதி இணைந்தாா்.

குழாயைச் செலுத்துவதற்கு துளையிடப்பட்ட பாதையில் இரும்புக் கம்பிகள் குறுக்கிட்டது, துளையிடும் ‘ஆகா்’ இயந்திரம் நிறுவப்பட்டிருந்த கான்கிரீட் தளத்தில் விரிசல் ஏற்பட்டது உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளால் மீட்புப் பணிகள் அவ்வப்போது நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டன.

கான்கிரீட் தளத்தில் உண்டான விரிசல் சீா்செய்யப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டன. தொடங்கிய ஒரு மணி நேரத்தில் ஆகா் இயந்திரத்தின் பிளேடுகள் கான்கிரீட்-எஃகு கம்பி இடிபாடுகளில் சிக்கிக் கொண்டன. இதனால் கிடைமட்டமாக குழாய் செலுத்தும் பணிகள் முழுவதுமாக முடங்கின.

இதனிடையே, மலையின் மேல் பகுதியிலிருந்து செங்குத்தாகத் துளையிட்டு 86 மீட்டா் ஆழத்துக்கு குழாயைச் செலுத்தி தொழிலாளா்களை மீட்பதற்கான மாற்றுத் திட்டமும் தொடங்கி நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், கிடைமட்டமாக குழாயைச் செலுத்தும் மீட்புத் திட்டத்தில் மீதமுள்ள 10-12 மீட்டா் தொலைவுக்கு மண் மற்றும் இடிபாடுகளை அகற்ற, ‘எலிவளை சுரங்க முறை’ தோண்டுதலில் நிபுணத்துவம் பெற்ற 12 போ் அடங்கிய சுரங்கத் தொழில் பணியாளா்கள் குழு மூலம் நேரடியாகத் துளையிட்டு குழாயைச் செலுத்த திட்டமிடப்பட்டது. அதற்காக ராணுவத்தின் சென்னை கட்டுமானப் படைப் பிரிவைச் சோ்ந்த பொறியாளா்கள் குழு வீரா்களின் உதவியுடன் இயந்திரத்தின் உடைந்த முனைப் பகுதிகள் அகற்றப்பட்டன.

இதையடுத்து, துளையிடும் பணியில் ‘எலிவளை சுரங்க முறை’ பணியாளா்கள் கடந்த 2 நாள்களாக ஈடுபட்டு வந்தனா். அந்தப் பணிகள் 17-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இறுதிக்கட்டத்தை எட்டின. 

எலிவளை சுரங்க முறை பணியாளா்கள் குழுவினா் 60 மீட்டா் தொலைவுக்கு துளையிடப்பட்டு, குழாய் செலுத்தும் பணிகள் செவ்வாய்க்கிழமை இரவு முழுமையாக நிறைவடைந்தன.

அந்தக் குழாய்க்குள் நுழைந்த தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படையினா், தொழிலாளா்களை 2-3 நிமிடங்கள் இடைவேளையில் ஒருவா் பின் ஒருவராக அழைத்து வந்தனா். அவா்களை முதல்வா் புஷ்கா் சிங் தாமியும், மத்திய இணையமைச்சா் வி.கே.சிங்கும் கட்டித் தழுவி வரவேற்றனா்.

மீட்கப்பட்ட தொழிலாளா்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக முதல்கட்ட தகவல்கள் வெளியானது.

சுரங்கப் பாதையில் இருந்து தொழிலாளா்கள் வெளியேறியத் தொடங்கியதும், சம்பவ இடத்தில் கூடியிருந்த உறவினா்கள், மீட்புப் பணியாளா்கள், பொதுமக்கள் கரகோஷம் எழுப்பி தொழிலாளா்களை வரவேற்றனா். மேலும், மீட்புப் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள் அனைவருக்கும் தொழிலாளா்களின் குடும்பத்தினா் நன்றி தெரிவித்தனா்.

அரசுக்கு நன்றி:
பதட்டமான எதிர்பார்ப்புக்கு மத்தியில் 17 -ஆவது நாள் போராட்டமான செவ்வாய்க்கிழமை இரவு சில்க்யாரா சுரங்கப்பாதையில் இருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்ட செய்தி வெளியானதும் 41 தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் முகத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் மலர்ந்தன.

தேசத்தின் கவனத்தை ஈர்த்த முழுமையான மீட்பு முயற்சிகளின் உச்சக்கட்டமாக உணர்ச்சிகரமான தருணம் வெளிப்பட்டது.

நீண்டகால விரக்தியைத் தாங்கிக் கொண்டிருந்த குடும்பங்கள், தொழிலாளர்களின் மீட்பைக் கொண்டாடியதுடன், தங்கள் அன்புக்குரியவர்களை மீண்டும் தங்களுடன் அழைத்து வந்து சேர்த்தற்காக முழு மனதுடன் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். சில குடும்ப உறுப்பினர்கள் தொழிலாளர்களுடன் விடியோ அழைப்பு மூலம் அவர்களின் நலனை உறுதி செய்தனர்.

சம்பவம் நடந்து ஓரிரு நாட்களுக்குப் பிறகு அங்கு காத்துக்கிடந்த உறவினர்கள் பலர், தங்களது அன்புக்குரியவர்களுடன் மீண்டும் இணைந்தனர்.

உத்திரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் மஞ்சித்தின் வீட்டில் கொண்டாட்டங்கள் நிறைந்து காட்டப்பட்டன.

இது குறித்து மஞ்சித்தின் தந்தை கூறுகையில், "எனது மகன் பத்திரமாக மீட்கப்பட்ட செய்தி அறிந்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். சுரங்கப்பாதையில் சிக்கிய அனைவரையும் பத்திரமாக மீட்ட இந்திய அரசுக்கும் மீட்புக் குழுவினருக்கும் நன்றி" என்று கூறினார்.

இதேபோன்று ஒடிசாவின் நபரங்பூரில் பக்பன் பத்ராவின் குடும்ப உறுப்பினர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர்.

ஒடிசா மயூர்பஞ்ச் பகுதியைச் சேர்ந்த தீரன் நாயக்கின் தாய், இந்திய அரசுக்கும் மீட்புக் குழுவினருக்கு தனது நன்றியை தெரிவித்தார். 

மற்றொரு தொழிலாளியான ராம் பிரசாத் நர்சாரியின் குடும்ப உறுப்பினர்கள் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டனர், மேலும் நர்சாரியின் மனைவி, கூறுகையில் "நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்... இந்திய அரசுக்கு நன்றி" என்று கூறினார்.

சுரங்கப்பாதையில் சிக்கிய அனைவரையும் பத்திரமாக மீட்ட இந்திய அரசுக்கும், அசாம் அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்... மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதைக் கேள்விப்பட்டு நிம்மதி அடைந்ததாக நர்சாரியின் தந்தை தெரிவித்தார்.

ஹிமாச்சலத்தை சேர்ந்த ஒரே தொழிலாளியான விஷால் குடும்பத்தினர் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

உத்தரகண்ட் மற்றும் ஹிமாச்சல் அரசுகளுக்கு விஷாலின் தாயார் ஊர்மிளா நன்றி தெரிவித்தார். "உத்தரகண்ட் மற்றும் ஹிமாச்சல் அரசுகளால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம்; அவர்களுக்கு எங்களது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று அவர் கூறினார்.

மீட்கப்பட்டவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடியும் தொலைபேசியில் பேசினார். 

சுரங்கப் பாதையில் சிக்கிக்கொண்ட 41 பேர்களில் 15 பேர் ஜார்கண்ட், ,2 பேர் உத்தரகண்ட்,  5 பேர் பிகார், 3 பேர் மேற்கு வங்கம், 8 பேர் உத்தர பிரதேசம், 5 பேர் ஒடிசா,  2 பேர் அஸ்ஸாம், ஒருவர் ஹிமாச்சலத்தை சேர்ந்தவர். 

சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை வெற்றிகரமாக மீட்ட எலிதுளை சுரங்கத் தொழிலாளர்களை வாழ்த்திய உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி 

மருத்துவப் பரிசோதனை
இந்த நிலையில், சில்க்யாரா சுரங்கப் பாதையில் இருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களின் மருத்துவப் பரிசோதனை சினியாலிசவுட் சமூக சுகாதார நிலையத்தில் நடந்து வருகிறது.

சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி உணவு வழங்கப்பட்டு வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் உடல்நல சவால்கள் குறித்து டாக்டர் பிரவின் குமார் கூறும்போது, சுரங்கப் பாதையில் சிக்கியிருந்தபோது "தொழிலாளர்களுக்கு பெரிய நோய் எதுவும் இல்லை. சில தொழிலாளர்கள் சிறுநீர் கழிப்பதில் சிரமம் மற்றும் ஒவ்வாமையை எதிர்கொண்டனர், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தண்ணீர், பழச்சாறு மற்றும் உணவு தொடர்ந்து வழங்கப்பட்டு" வருவதாகவும், அனைவரும் ஆரோக்கியமாகவும், நல்ல மனநிலையில் உள்ளனர் என்று தெரிவித்தார்.

முன்னதாக, செவ்வாய்கிழமை இரவு  சில்க்யாரா சுரங்கப்பாதையில் இருந்து 41 தொழிலாளர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்ட பிறகு, மீட்பு நடவடிக்கைக்கு பொறுப்பான கர்வால் பிரிவின் சுகாதார இயக்குநர் மருத்துவர் பிரவின் குமார், சிக்கிய தொழிலாளர்களுடன் தொடர்ந்து தொடர்புகொண்டது அவர்களின் மனநல ஆரோக்கியத்தை பராமரிக்க உதவியது.

முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் மாநில சுகாதார அமைச்சர் இருவரும் தொடர்ந்து அந்த இடத்திலேயே இருந்து மீட்புப் பணிகளை கண்காணித்து வருவதாக தெரிவித்தது, தொழிலாளர்களின் மன உறுதியை மேலும் தொடர்ந்து அதிகரித்தன.

"மாநில சுகாதார அமைச்சரும், முதல்வரும் சம்பவ இடத்திலேயே இருந்து மீட்புப் பணிகளை கண்காணித்து வந்தனர். முதல் நாளிலிருந்தே, எங்கள் குழுக்கள் தொழிலாளர்களின் மன உறுதியை அதிகரித்ததுடன், தொடர்ந்து தொழிலாளர்களுடன் தொடர்பில் இருந்து வந்தனர்." 

மேலும், தொழிலாளார்களுக்கு "குழாய் வழியாக எந்த உணவுப் பொருட்களை அனுப்ப முடியுமோ அவை அனுப்பப்பட்டன, மேலும் எங்கள் குழுவினர் அவர்களின் மன உறுதியை அதிகரித்துக் கொண்டே இருந்தனர், இதனால்தான் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட பிறகு நல்ல மனநிலையில் உள்ளனர்," என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com