5 மாநில தேர்தல்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியீடு

5 மாநில தேர்தல்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியீடு

ராஜஸ்தான், தெலங்கானா உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெல்லும் கட்சியே மக்களவைத் தேர்தலிலும் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

ராஜஸ்தான், தெலங்கானா உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெல்லும் கட்சியே மக்களவைத் தேர்தலிலும் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

அடுத்தாண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலின் வெற்றிக்கு மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலின் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

மக்களவைத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க பாஜக தலைவர்கள் பல்வேறு வியூகங்களை வகுத்து நாடு முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தன.

இருப்பினும், மணிப்பூர் கலவரத்தால் வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

மறுபுறம் பாஜக ஆட்சியை வீழ்த்துவதற்காக காங்கிரஸ், திமுக, திரிணமூல், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி உள்ளிட்ட 28 கட்சிகளை இணைத்து ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி வியூகங்களை அமைத்திருந்தது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தை ஆம் ஆத்மியிடம் இழந்தாலும், ஹிமாசலப் பிரதேசத்தையும், கர்நாடகத்தையும் பாஜகவிடம் இருந்து கைப்பற்றிய காங்கிரஸ் புத்துணர்ச்சியுடன் களத்தில் உள்ளது.

மேலும், ஆட்சிக்கு வந்தால் அனைத்து மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பு காங்கிரஸ் வாக்கு வங்கிக்கு கூடுதல் வலுசேர்த்துள்ளது.

இந்த நிலையில், ராஜஸ்தான், தெலங்கானா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலானது மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்ட களமாக பார்க்கப்படுகிறது.

மிசோரம், சத்தீஸ்கரின் முதல்கட்ட வாக்குப்பதிவு நவ.7, ம.பி. மற்றும் சத்தீஸ்கரின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவ.17, ராஜஸ்தானில் நவ. 25, தெலங்கானாவில் நவ. 30 வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படவுள்ளது.

இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை பிரபல கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் இன்று மாலை வெளியிட்டுள்ளன.

மிசோரம்

மொத்தம் 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்தை மிசோ தேசிய முன்னணி ஆட்சி செய்து வருகின்றது.

மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்தாலும், சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் மிசோ தேசிய முன்னணி தனித்து போட்டியிட்டுள்ளது.

அதேபோல், மாநிலத்தின் இரண்டாவது பெரிய கட்சியாகவுள்ள  ஜோரம் மக்கள் இயக்கம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் 40 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளன.

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மக்களவையில் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக மிசோ தேசிய முன்னணியின் ஒரே எம்பி லால்ரோசங்கா வாக்களித்து பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாகவும் மிசோ தேசிய முன்னணி அறிவித்ததை தொடர்ந்து, பாஜக 21 தொகுதிகளில் மட்டும் தனித்து போட்டியிட்டது.

இந்த தேர்தலில் மிசோ தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் இயக்கம் மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவிய நிலையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நீடிக்கும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர்

15 ஆண்டுகளாக சத்தீஸ்கரை ஆண்ட பாஜக கடந்த முறை காங்கிரஸிடம் தோல்வி அடைந்தது. இந்த முறை மீண்டும் வெற்றி பெற நக்ஸல் பிரச்னையை முன்வைத்து பாஜக தலைவர்கள் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டனர்.

ஆனால், இலவச மின்சாரம், விவசாய கடன் தள்ளுபடி, சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் உள்ளிட்ட காங்கிரஸின் வலுவான வாக்குறுதிகள் அக்கட்சியின் வாக்கு வங்கிக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

இந்த நிலையில், இரண்டாவது முறையாக பூபேஸ் பாகெல் தலைமையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், மொத்தமுள்ள 90 தொகுதிகளில் கடந்த முறையைவிட அதிக தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா

தெலங்கானா மாநிலத்தை பொறுத்தவரை ஆளும் கே.சந்திரசேகர் ராவின்(கேசிஆர்) பாரதிய ராஷ்டிர சமிதிக்கும், காங்கிரஸுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

அதேபோல், மக்களவை தேர்தலில் தென் மாநில மக்களிடையே பாஜகவின் பலத்தை நிரூபிக்க தெலங்கானா தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்காக பல மாதங்களாக தெலங்கானாவை குறிவைத்து பாஜக தலைவர்கள் சூறாவளி பிரசாரமும் மேற்கொண்டனர்.

இந்த நிலையில், தெலங்கானாவில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று மீண்டும் கேசிஆர் ஆட்சி அமைப்பார் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. 

இருப்பினும், காங்கிரஸுக்கும் தேசிய ராஷ்டிர சமிதிக்கும் இடையே சில தொகுதிகள் மட்டுமே வித்தியாசம் இருக்குமென்றும், பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

ராஜஸ்தான்

ராஜஸ்தானில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி வெற்றி பெற்றாலும் பாஜகவைவிட வெறும் 0.5 சதவிகிதம் வாக்குகள் மட்டுமே அதிகமாக பெற்றிருந்தது. இந்த மாநிலத்தில் ஒவ்வொரு முறையும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து கொண்டு வருகின்றது.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் சச்சின் பைலட் தூக்கிய போர்க்கொடி காங்கிரஸுக்கு பலவீனமாக அமைந்துள்ளது.

முதல்வர் கெலாட்டுக்கு எதிராக பேரணி, கட்சியின் தலைமைக்கு எதிரான சச்சின் பைலட்டின் கருத்துகள் மக்களிடையே சலிப்பை உண்டாக்கியதன் விளைவு பாஜகவின் செல்வாக்கு தானாக அதிகரித்துள்ளது.

கருத்துக் கணிப்பு முடிவுகளும் அதனையே வெளிப்படுத்துகிறது. ராஜஸ்தானில் 100 முதல் 120 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று முடிவுகள் வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து மூன்று முறை பாஜக ஆட்சி செய்து வருகின்றது. உத்தரப் பிரதேசம் போல் ஹிந்துத்துவா கொள்கையை அதிகம் பின்பற்றும் மக்களை கொண்ட மாநிலமாக ம.பி. உள்ளது. இங்கு ஹிந்துத்துவா அரசியலை மையமாக கொண்டு பாஜக தொடர் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனும் கர்நாடக அமைச்சருமான பிரியங் கார்கே மற்றும் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சனாதனத்துக்கு எதிராக பேசிய கருத்துகள் ம.பி. தேர்தலில் எதிரொலித்தது.

கடந்த 2018 சட்டப்பேரவைத் தேர்தலில் ம.பி.யில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், ஒரே ஆண்டில் எம்எல்ஏக்களின் அணி தாவலால் ஆட்சி பறிபோனது.

இந்த முறை பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நோக்கில், பெண்களுக்கு மாத உதவித் தொகை, இலவச பேருந்து சேவை, இலவச மின்சாரம் போன்ற அடுக்கடுக்கான வாக்குறுதிகளை காங்கிரஸ் வழங்கியுள்ளது.

இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 102 முதல் 123 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.  பாஜக 100 இடங்களைப் பிடிக்க வாய்ப்பிருப்பதாகவும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், 5 மாநிலங்களிலும் வெற்றி பெறும் கட்சிகளுக்கு அதீத பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு குறைவாக உள்ளதால் கடைசி நேர மாற்றங்கள்கூட நிகழலாம்.

வட இந்தியாவில் பலம் வாய்ந்த கட்சியாக இருக்கும் பாஜகவின் நம்பிக்கையை உடைக்க ம.பி., ராஜஸ்தான் மாநிலங்களின் வெற்றி காங்கிரஸுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அதேபோல், இந்த தேர்தலில் பெரும் தோல்வியை காங்கிரஸ் சந்திக்கும் பட்சத்தில் ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து சில கட்சிகள் விலகவும் வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே, ம.பி. தேர்தலில் கூட்டணிக்கு உடன்படாத காங்கிரஸுக்கு எதிராக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பிரசாரம் மேற்கொண்டுள்ளது கூட்டணிக்குள் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

பல்வேறு மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ், மக்களவை தொகுதி பங்கீட்டின்போது அதிக இடங்களை பெற இந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வெற்றி மிக அவசியம்.

இந்த தேர்தலில் தோல்வியுற்றாலும், மக்களவைத் தேர்தலில் சிறிய பாதிப்புகள் மட்டுமே பாஜகவுக்கு ஏற்படும். ஆனால், காங்கிரஸுக்கு அப்படி அல்ல.

‘இந்தியா’ கூட்டணி சிதறுவதும், சிதறாததும் 5 மாநில வெற்றிலேயே இருக்கின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com