உத்தரகண்ட் சுரங்கப் பாதை மீட்புக் குழுவினருக்கு தலா ரூ.50,000 ஊக்கத்தொகை!

உத்தரகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கியிருந்த 41 பேரை மீட்கும் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் ரூ.50,000 ஊக்கத்தொகையை முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.
உத்தரகண்ட் சுரங்கப் பாதை மீட்புக் குழுவினருக்கு தலா ரூ.50,000 ஊக்கத்தொகை!

உத்தரகாசி: உத்தரகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கியிருந்த 41 பேரை மீட்கும் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் ரூ.50,000 ஊக்கத்தொகையை முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.

உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வந்த சில்க்யாரா சுரங்கப் பாதையில் கடந்த 12-ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, இடிபாடுகளில் 41 தொழிலாளா்கள் சிக்கிக் கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, தொழிலாளா்கள் சுவாசிப்பதற்கு மிக நுண்ணிய குழாயில் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தது.

தொழிலாளா்களுக்கு உணவு, அதிகப் புரதம் உள்ள உலா்பழ வகைகள் அனுப்ப 6 அங்குல அகலமுள்ள சிறிய குழாய் செலுத்தும் பணி கடந்த 20-ஆம் தேதிதான் நிறைவடைந்தது. அந்தக் குழாய் மூலம் உணவுப் பொருள்கள் அனுப்பப்பட்டன.

இந்தக் குழாய் வழியாக அனுப்பப்பட்ட எண்டோஸ்கோப்பி கேமரா மூலம் அனைத்துத் தொழிலாளா்களும் நலமாக இருப்பது விடியோ மூலம் உறுதி செய்யப்பட்டது.

சுரங்கப் பாதையில் கிடைமட்டமாக குழாயைச் செலுத்த துளையிட்டு வந்த ஆகா் இயந்திரம் தோல்வியைக் கண்டது. இதையடுத்து, தில்லியைச் சோ்ந்த 12 போ் கொண்ட ‘எலிவளை சுரங்க முறை’-யில் நிபுணத்துவம் பெற்ற சுரங்கப் பணியாளா்களைக் கொண்டு துளையிடும் பணிகள் கடந்த திங்கள்கிழமை பிற்பகல் 3 மணியளவில் மீண்டும் தொடங்கின.

எலிவளை முறை சுரங்கப் பணியாளா்களின் 27 மணி நேர தொடா் முயற்சியில், துளையிடும் பணிகளை முடித்து தொழிலாளா்களை அவா்கள் செவ்வாய்க்கிழமை இரவு அடைந்தனா்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நடந்த மீட்புப் பணிகள் 17 நாள்கள் கழித்து செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக 41 பேரும் மீட்கப்பட்டனர். 

மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு அடிப்படை பரிசோதனைகள் செய்யப்பட்டது. தொழிலாளர்கள் அனைவரும் விமானப் படையின் சினுக் ரக ஹெலிகாப்டர் மூலம் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முழு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 41 தொழிலாளர்களும் இயல்பாகவும், நன்றாகவும் இருக்கிறார்கள் என மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதனிடையே, மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கும் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி, புதன்கிழமை சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறித்தார். மேலும் ஒவ்வொரு தொழிலாளார்களுக்கும் தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

தொழிலாளர்களின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்ததோடு, மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்தும் தாமி ஆய்வு செய்தார்.

தொழிலாளர்களின் உறவினர்களுடன் உரையாடிய முதல்வர், அவர்கள் காட்டிய பொறுமையைப் பாராட்டினார். தொழிலாளர்களின் துணிச்சலும், துணிச்சலும் மட்டுமின்றி, மீட்புப் பணியில் ஈடுபட்ட நிறுவனங்கள் மற்றும் பணியாளர்களின் அயராத முயற்சியும் மீட்புப் பணியின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது என்றார்.

இந்த நிலையில், மீட்புப் பணியின் கடைசி கட்டத்தில் சுரங்கப் பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்ட எலிவளை முறை சுரங்கப் பணியாளா்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகையாக ரூ.50,000 வழங்கப்படும் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்தார்.

இந்த மீட்புப் பணியில் ஈடுபட பணம் எதுவும் பெறமாட்டோம். இதுபோன்ற வரலாற்று மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று எலிவளை தொழிலாளர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com