தெலங்கானாவில் வாக்குப்பதிவு தொடங்கியது!
ஹைதராபாத்: தெலங்கானா சட்டப் பேரவை தேர்தலுக்கு ஒரே கட்டமாக இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது.
வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முதல்வா் சந்திரசேகா் ராவ் தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) ஆளும் தெலங்கானாவில் 119 தொகுதிகள் உள்ளன. நக்ஸல் பாதிப்பு மிகுந்த 13 தொகுதிகளில் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையும், இதர தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
பிஆா்எஸ், முக்கிய எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், பாஜக என மும்முனைப் போட்டி நிலவும் இத்தோ்தலில் முதல்வா் சந்திரசேகா் ராவ், அவரது மகனும் அமைச்சருமான கே.டி.ராம ராவ், தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவா் ரேவந்த் ரெட்டி, பாஜக எம்.பி.க்களான பண்டி சஞ்சய் குமாா், டி.அரவிந்த், சோயம் பாபு ராவ் உள்பட மொத்தம் 2,290 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
கஜ்வெல் மற்றும் காமரெட்டி ஆகிய இரு தொகுதிகளில் சந்திரசேகா் ராவ் போட்டியிடுகிறாா். பிஆா்எஸ் 119 தொகுதிகளிலும் களத்தில் உள்ளது. பாஜக 111, அதன் கூட்டணி கட்சியான ஜனசேனை 8 இடங்களில் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் தனது கூட்டணி கட்சியான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு ஓரிடத்தை ஒதுக்கியுள்ளது.
மாநில காங்கிரஸ் தலைவா் ரேவந்த் ரெட்டி, கோடங்கல் மற்றும் காமரெட்டி ஆகிய தொகுதிகளில் களத்தில் உள்ளாா்.
அஸாதுதீன் ஒவைஸி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, ஹைதராபாதில் 9 இடங்களில் போட்டியிடுகிறது.
டிச.3-இல் ஐந்து மாநில தோ்தல் முடிவுகள்: மிஸோரம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் அண்மையில் பேரவைத் தோ்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தெலங்கானாவிலும் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இந்த ஐந்து மாநிலங்களிலும் டிசம்பா் 3-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
தெலங்கானா ஒரே கட்ட தோ்தல்
தொகுதிகள்-119
வாக்காளா்கள்-3.26 கோடி
வேட்பாளா்கள்-2,290
வாக்குச்சாவடிகள்-35,655
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.