ரயில்வேயில் லஞ்சம்: லாலு, ராப்ரி தேவி, தேஜஸ்வி உள்ளிட்டோருக்கு ஜாமீன்!

ரயில்வே வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு தில்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
லாலு பிரசாத் யாதவ்
லாலு பிரசாத் யாதவ்

ரயில்வே வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு தில்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் இன்று(புதன்கிழமை) ஜாமீன் வழங்கியுள்ளது.

கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தாா். அப்போது ரயில்வேயின் குரூப்-டி பணிகளில் சிலா் விதிமுறைகளுக்குப் புறம்பாக நியமிக்கப்பட்டனா்.

அதற்கு லஞ்சமாக வேலை பெற்றவா்கள், அவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்குச் சொந்தமான சுமாா் 1.05 லட்சம் சதுரஅடி நிலம், லாலு குடும்பத்தினரின் பெயருக்கு மாற்றப்பட்டுப் பதிவு செய்யப்பட்டது. அந்த நிலத்தை சந்தை மதிப்பைவிட குறைந்த விலைக்கு லாலு குடும்பத்தினா் நேரடியாக வாங்கியுள்ளனா் என்று சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சட்டவிரோத பணப்பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடா்பாக லாலு பிரசாதின் மனைவி ராப்ரி தேவி, மகனும் பிகாா் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், மகள்கள் மிசா பாரதி (மாநிலங்களவை எம்.பி.), சந்தா யாதவ், ராகினி யாதவ் உள்ளிட்டோரிடம் ஏற்கெனவே அமலாக்கத் துறை விசாரணை நடத்தியுள்ளது. கடந்த ஜூலை 3 ஆம் தேதி இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில் இன்று தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் விசாரணையில்,  லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ் மற்றும் மேலும் 14 பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு அக்டோபர் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com